ராஞ்சி: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 17 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த விராட் கோலி உடன் இணைந்து 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரோஹித். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ருதுராஜ், வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் வந்த கேப்டன் கே.எல்.ராகுல் உடன் 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி. அவர், 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ராகுல் 60, ஜடேஜா 32 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது இந்தியா.
350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. அந்த அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேத்யூ ப்ரீட்ஸ்கே, மார்கோ யான்சன், கார்பின் போஷ் ஆகியோர் அரை சதம் விளாசி இந்தியாவை அச்சுறுத்தினர். அப்போது ஒரே ஓவரில் யான்சன் மற்றும் ப்ரீட்ஸ்கே விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் கைப்பற்றி அசத்தினார். அது இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமைந்தது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி பெற்றார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2, பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். இந்த தொடரின் அடுத்த போட்டி டிசம்பர் 3-ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறுகிறது.