டிட்வா புயல் வலுவிழப்பு: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது - ரெட் அலர்ட் வாபஸ்

டிட்வா புயல் வலுவிழப்பு: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது - ரெட் அலர்ட் வாபஸ்
Updated on
1 min read

சென்னை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் நிலைக் கொண்டிருந்த டிட்வா புயல் வலுவிழந்தது. இந்த புயலானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலவீனமடைந்து, கடல் பகுதியில் வடக்கு நோக்கி நிதானமாக நகர்ந்து வரும் நிலையில் நாளை (டிச.1) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வங்கக்கடலின் தென்மேற்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை ஒட்டி மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் டிட்வா புயல் நகர்ந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயலின் மைய பகுதி கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

இந்நிலையில், டிட்வா புயல் தொடர்ந்து வடக்கு பக்கமாக நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது கடலின் வடமேற்கு பகுதியில் மையம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்றும், திங்கட்கிழமை முதல் கடல் சீற்றம் படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் டிட்வா புயல் பாதிப்பு: தமிழகத்தில் டிட்வா புயல் மழை தொடர்பான சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்து இறந்தனர். மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். 149 கால்நடைகள் உயிரிழந்தன.

57 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நாகப்பட்டினத்தில் மட்டும் 24 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களும், தஞ்சையில் 15 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களும், மயிலாடுதுறையில் 8000 ஹெக்டேர் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் 234 குடிசைகள் சேதமடைந்துள்ளன.

தமிழகத்தில் மழை பாதிப்பு அதிகமுள்ள 9 மாவட்டங்களில் 38 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தி அதில் 2300 பேரை தங்க வைத்துள்ளோம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்திருந்தார்.

டிட்வா புயல் வலுவிழப்பு: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது - ரெட் அலர்ட் வாபஸ்
திருப்பத்தூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in