சென்னை: நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், மெஸ்ஸி மற்றும் யமாலுக்கு இடையிலான கனெக்டிவிட்ட குறித்து பார்ப்போம்.
கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக அறியப்படுபவர் மெஸ்ஸி. அந்த வரிசையில் இணையும் அடுத்த தலைமுறை வீரராக அறியப்படுபவர் யமால். இவர்கள் இருவரும் களத்தில் சந்திப்பது இதுவே முதல் முறை. இந்நிலையில், இவர்கள் இருவரும் இதற்கு முன்பு போட்டோஷூட் ஒன்றுக்காக சந்தித்த புகைப்படம் இப்போது வைரலாகி உள்ளது.
அந்தப் புகைப்படம் கடந்த 2007-ல் எடுக்கப்பட்டது. அப்போது மெஸ்ஸிக்கு வயது 20. யமால் ஆறு மாத கைக்குழந்தை. அப்போது ஸ்பெயின் நாட்டு கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வந்தார்.
அந்த கிளப்பில் எப்போதும் ஒரு சடங்கு உண்டு. காலண்டருக்காக வீரர்கள் குழந்தையுடன் போஸ் கொடுக்க வேண்டும். ஜோவான் மான்ஃபோர்ட் அப்போது எடுத்த புகைப்படத்தில் மெஸ்ஸி கையில் எதேச்சையாக தவழ்ந்தது, இன்றைய ஸ்பெயின் நட்சத்திரம் லமின் யமால்தான்.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவும் ஸ்பெயினும் மோதவுள்ள நிலையில் இந்தப் புகைப்படம் கவனம் பெற்றுள்ளது.
யூரோ 2024 தொடரின் போது இந்தப் படத்தை யமாலின் தந்தை பகிர்ந்திருந்தார். அப்போதே அது வைரலானது.
இப்போது 19 வயது யமாலும், 39 வயது மெஸ்ஸியும் முதல் முறையாக களத்தில் சந்திக்க உள்ளனர். இருவரும் தாங்கள் சார்ந்துள்ள அணியின் முக்கிய வீரர்கள் திகழ்கின்றனர். அந்தப் படமும், தற்போதைய அவர்களின் நிலையும் ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பதை அமைந்துள்ளது.