பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபிக்கான தேசிய ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடர் இன்று (டிசம்பர் 24) நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது.
உள்ளூர் தொடரான இதில் இந்திய அணிக்காக விளையாடும் அனைத்து வீரர்களும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இதனால் இந்திய அணியின் சீனியர் வீரர்களும், இளம் வீரர்களும் தங்களது மாநிலங்களை சேர்ந்த அணிகளுக்காக களமிறங்க உள்ளனர்.
இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட உள்ளனர். இது இந்திய கிரிக்கெட்டுக்குள் உருவாகி வரும் அதிகார மையத்துக்கு அவர்கள், இனி விதிவிலக்கல்ல என்பதையே தெளிவுப்படுத்துகிறது.
இன்றும் வரும் 26-ம் தேதியும் ஜெய்ப்பூரில் சிக்கிம் மற்றும் உத்தராகண்ட் அணிகளுக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திலும் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா களமிறங்குகிறார். அதேவேளையில் மும்பையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கருடன் இணைந்து விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். டெல்லி அணிக்காக களமிறங்கும் அவர், இன்னும் எந்தெந்த போட்டிகளில் விளையாட உள்ளார் என்பதை தெரிவிக்கவில்லை.
எலைட் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஆந்திராவுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த கர்நாடக கிரிக்கெட் சங்கம், அம்மாநில அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களை கருதி போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்கவில்லை.
இதையடுத்து இந்த போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையே விராட் கோலி நேற்று இரவு பெங்களூரு வந்தடைந்தார். இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என ஊகங்கள் எழுந்துள்ளன. வளர்ந்து வரும் இளம் வீரர்களுடன் இணைந்து சீனியர் வீரர்கள் விளையாடுவது அவர்களின் திறனை மேலும் மெருகேற்றிக் கொள்ளவும், மட்டையுடன் சிறந்த தொடர்பில் இருக்கவும் உதவக்கூடும்.
டி 20 உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில், அதேவேளையில் சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இஷான் கிஷன், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் களமிறக்கப்பட்டு வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் உள்ளிட்டோருக்கும் விஜய்
ஹசாரே தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ரிஷப் பந்த், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டி, டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கவில்லை. குறுகிய வடிவிலான போட்டிகளில் அவர், மீண்டும் அணிக்கு திரும்பும் வகையில் விஜய் ஹசாரே தொடரில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாத ஷுப்மன், பஞ்சாப் அணிக்காக களமிறங் உள்ளார். அவர், தனது மட்டை வீச்சால் இந்திய அணி தேர்வுக் குழுவினருக்கு பதிலடி கொடுக்கக்கூடும். மேலும் அடுத்த மாதம் இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கு தயாராகும் விதமாக விஜய் ஹசாரே டிராபி போட்டிகளை பயன்படுத்திக் கொள்ள ஷுப்மன் கில் முயற்சிக்கக் கூடும். தொடக்க நாளான இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் மகாராஷ்டிரா, பஞ்சாப் அணியையும், ஜார்க்கண்ட், கர்நாடக அணியையும், தமிழ்நாடு, புதுச்சேரியையும் எதிர்கொள்கின்றன. இந்த ஆட்டங்கள் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.