விளையாட்டு

ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி, இந்திய அணியின் பலவீனங்களை மறைக்க உதவாது!

ஆர்.முத்துக்குமார்

ஃபிளாட் பிட்ச்களில் ஐபிஎல் போட்டிகளை ஆடுவது, பெரிய பவுலர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி அவர்கள் பந்து வீச்சைத் துவம்சம் செய்வது உண்மையான சவாலாக அமையாது என்பதை அயர்லாந்து, இங்கிலாந்து தோல்விகள் மூலம் இந்திய அணியின் ‘திங்க் - டேங்க்’ உணர்ந்திருக்க வேண்டும், அதாவது ஐயம் திரிபற, உண்மையை யோசித்தால் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

இங்கிலாந்து, அயர்லாந்து தோல்விகளை ஜிம்பாப்வே வெற்றி மூலம் மறைத்து மறுத்துவிட முடியாது. தோல்விகள் குறித்து பணமழை பிசிசிஐ வழக்கமான பதிலையே எதிர்வினையாக ஆற்றியுள்ளது. அதாவது ‘மறு ஆய்வு’ செய்கிறோம், ‘சீராய்வு’ செய்கிறோம் என்பார்கள், பிசிசிஐ-யும் அந்த வழக்கமான ‘க்ளிஷே’யையே பதிலாக அளித்துள்ளது. அதாவது ‘குறைபாடுகளைச் சரி செய்தல்’ என்பார்கள். மற்றபடி அச்சப்பட ஒன்றுமில்லை நன்றாகத்தான் உள்ளது என்பார்கள்.

முழுமையான மறுசீரமைப்பே தற்போதைய காலத்தின் கட்டாயம்; மறு ஆய்வுக் கூட்டத்தில் இதுதான் அஜெண்டாவாக இருக்க வேண்டும்.

முக்கியப் பிரச்சனை என்னவெனில், ஐபிஎல் போன்ற மிக நீண்ட மன/உடல் சோர்வை ஏற்படுத்தும் நீண்ட களைப்பையும் இளைப்பாறுதலையும் கோரும் ஐபிஎல் தொடருக்குப் பிறகே கடினமான தொடர்களை ஆடுவது கடினம். ஏனெனில், வீரர்களின் உடல் தகுதி, மனநிலை சவாலான கிரிக்கெட்டை எதிர்கொள்வதற்கு ஏற்ப கடினமாக இருக்காது.

அணித் தேர்வாளர்களும், பயிற்சியாளர்களுமே ஆய்விலிருந்து தப்பக் கூடாது. ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் செய்யும் ஸ்கோர்களையும் அதிரடிகளையும் வைத்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு வீரர்களைத் தேர்வு செய்யக் கூடாது.

அதாவது, கிரிக்கெட் பற்றிய நுட்பமான அறிவில்லாதவர்கள் சோஷியல் மீடியா மூலம் கொடுக்கும் பிரஷர், பிராண்ட் கட்டமைப்பு ஏஜெண்ட்கள் ஆகியோர் பணம் பார்த்து விட வேண்டும் என்று சில வீரர்களைப் பந்தயக் குதிரைகளாக்கி அவர்கள் மீது அதீத முதலீடு செய்வது போன்ற தப்பறைகள் முடிக்கப்பட வேண்டும்.

கம்பீரின் அணித் தேர்வு, அதாவது லெவன் தேர்வு பாரபட்சமாகத் தனக்குப் பிடித்த வீரர்களைத் தேர்வு செய்வதாக உள்ளதா என்பதை ஒருவரும் நிர்வாகத்தில் கேள்வி எழுப்புவதில்லை.

பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் டி20-களில் ஆடலாம், ஆனால் ஒருநாள் போட்டிகளில் உடனேயே பெரிய அணிகளுக்கு எதிராக ஐபிஎல்-ஐ வைத்து ஆடத் தேர்வு செய்ய முடியுமா? வைபவ் சூரியவன்ஷியை முதிர்ச்சியற்ற நிலையில் வெறும் ஃபேன்ஸியாக இறக்கி அவர் கரியர் காலியானால் யார் பொறுப்பு?

மேலும் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஏன் ஒருநாள் அணியில் இல்லை. ஏன் ஷிவம் துபே இருக்கிறார்? குல்தீப் யாதவ் ஏன் ஒருநாள் அணியில் இல்லை. ஜடேஜா என்ன ஆனார்?

அணித் தேர்வு முடிவுகளின் அடிப்படை என்ன என்பது பற்றி எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லை. குறிப்பாக கம்பீர் வந்த பிறகே எல்லாமே மூடு மந்திரமாகி விட்டது. அர்ஷ்தீப் சிங் உண்மையில் இந்திய வெள்ளைப் பந்து பவுலிங்கின் தலைமையாகக் கருதப்படக் கூடியவரா என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, ​​அவர் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரை பெரிதாக நம்பினார் கம்பீர். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சுந்தர் மூன்றாவது டவுனில் களமிறங்கினார்; நிதிஷ் ரெட்டி அடுத்த ஹர்திக் பாண்டியா ஆக உருவெடுப்பார் என்று நம்பினோம்.

துருவ் ஜூரல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் திறன் கொண்ட, மிகுந்த உத்வேகம் மிக்க விக்கெட் கீப்பராவார் என்று பில்ட் அப் செய்யப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில், இவர்கள் யாராலும் எந்தவித விவாதமும் இன்றி இந்தியாவின் 'பிளேயிங் லெவனில்’ இடம்பிடிக்க முடியாத சூழலே உள்ளது. இதற்கு யார் பொறுப்பு?

ரோஹித் சர்மா, விராட் கோலி இன்னும் எத்தனை தொடர்களை ஆட முடியும் திடீரென இருவரும் ஓய்வு அறிவித்தால் பேக் அப் இருக்கிறதா போன்ற கேள்விகள் எழவே செய்கின்றன. ஏதோ கண்மூடித்தனமாக செலக்‌ஷனிலும் டீம் உத்திகளிலும் நடந்து வருகிறது. அது என்ன என்றுதான் பலருக்கும் புரியவில்லை.

SCROLL FOR NEXT