குவாஹாட்டி: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக 11 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது.
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்களும், மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 77 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி 30 பந்துகளில் 80 ரன்கள் குவித்து மிரட்டியிருந்தது. 151 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணியால் 11 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ராஜஸ்தான் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் மும்பை அணி 2-வது தோல்வியை சந்தித்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக யார்க்கர் ஹீரோ ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சை வைபவ் சூர்யவன்ஷி எப்படி? எதிர்கொள்வார் என்பது போன்ற கேள்விகள் எழுந்திருந்தன. ஆனால் பும்ரா 131 கி.மீ. வேகத்தில் மிடில் மற்றும் லெக் திசையில் வீசிய முதல் பந்தையே
வைபவ் சூர்யவன்ஷி மிட் ஆன் திசையில் சிக்ஸருக்கு விளாசி அசத்தினார். தொடர்ந்து பும்ரா வீசிய அதே ஓவரின் 4-வது பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் சூர்யவன்ஷி. அவரது அச்சம் இல்லாத மட்டைவீச்சு ஆட்டத்தின் போக்கை மாற்றியது. போட்டி முடிவடைந்ததும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியதாவது: பும்ரா வீசிய முதல் பந்திலேயே சூர்யவன்ஷி சிக்ஸர் அடித்தார். அப்போது நான் அவரிடம் சென்று தொடர்ந்து உனது இயல்பான ஆட்டத்தை விளையாடு என்று கூறினேன்.
பும்ரா ஒரு ஜாம்பவான். அவருக்கு எதிராக சூர்யவன்ஷி ரன்களைக் குவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது மற்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் நம்மால் ரன்கள் சேர்க்க முடியும் என்ற உணர்வை எங்களுக்கு கொடுத்தது. சூர்யவன்ஷி தனது இயல்பான ஆட்டத்தை விளையாடியது அவருக்கு மிகவும் நன்றாக அமைந்தது.
அது என் மீதான அழுத்தத்தைக் குறைத்தது, அதன் பிறகு என்னால் மற்றொரு பந்துவீச்சாளரைத் தேர்வு செய்து அவருக்கு எதிராக அதிரடியாக விளையாட முடிந்தது. இது ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது, நாங்கள் இதை ரசித்து விளையாடினோம். இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறினார்.