விளையாட்டு

ரபாடா பந்தில் ஹெல்மெட்டில் அடிவாங்கிய பிறகு வெகுண்டெழுந்த வைபவ் சூரியவன்ஷி!

ஆர்.முத்துக்குமார்

ஐபிஎல் பந்து வீச்சாளர்களின் தரநிலையையே உயர்த்தி வருகிறார் வைபவ் சூரியவன்ஷி. நேற்று சூரியவன்ஷியைத் தடுத்தாட்கொள்ள, அவரை விரைவில் வீழ்த்தி அனுப்ப குஜராத் டைட்டன்ஸ் பவுலர்கள் தங்கள் பந்து வீச்சுத் தரத்தையே மேம்படுத்த வேண்டி வந்தது.

ஆம்! ஒரு கட்டத்தில் ரபாடா தொடர்ச்சியாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் வைபவ் உடலுக்கு பந்தைக் குறிவைத்து எகிறு பந்துகளை வீசினார். முகமது சிராஜ் மணிக்கு 140 கிமீ வேகம் தாண்டாதவர் நேற்று சூரியவன்ஷியைக் கட்டிப்போட மணிக்கு 149 கிமீ வேகம் வரை வீசினார் என்றால் 15 வயது சிறுவன் பெரிய ஜாம்பவான்களின் தரநிலையையே மாற்றியமைத்து வருகிறார் என்பதுதானே பொருள்?

ஆனால், இவர்கள் இருவரின் வேகமும், ஹோல்டரின் கடினமான லெந்த்களும் கூட இளம் புயலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த இன்னிங்ஸை மேலும் சிறப்பாக்கியது ஆடுகளத்தின் தன்மையே. முந்தைய நாளில் 250 ரன்களுக்கு மேல் குவிக்க உதவிய பேட்டிங் சொர்க்கமாக இருந்த ஆடுகளத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய விக்கெட் சற்று மந்தமாகவும் இரட்டை வேகத் தன்மையுடனும் காணப்பட்டது.

பேட்ஸ்மேன்களுக்கு ஓரளவு சாதகமாக இருந்தாலும், அது எளிதில் ரன்கள் குவிக்கக் கூடிய ஆடுகளம் இல்லை என்பதே உண்மை. ரபாடாவின் ஒரு அதிவேக பந்து ஒன்று மணிக்கு 153 கிமீ வேகம் கொண்டதாக அமைந்து நேரடியாக வைபவின் ஹெல்மெட்டில் மோதியது. அதாவது ஹூக் ஷாட் ஆனப்போன வைபவுக்கு பந்து சிக்காமல் அவரது இடது காது பகுதியில் ஹெல்மெட்டைத் தாக்கியது. கொஞ்சம் நிலைகுலைந்துதான் போனார். கன்கஷன் டெஸ்ட் எல்லாம் நடந்தது.

பிட்சின் இரட்டை வேகத்தன்மை காரணமாக அவர் முயன்ற சில புல் ஷாட்கள் கூட சரியாக பேட்டில் படாமல் போனது. அதே நேரத்தில், மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்துகொண்டிருந்ததால் கூடுதல் அழுத்தமும் நிலவியது. இத்தகைய கடினமான சூழ்நிலையில், முதலில் பொறுப்புடன் விளையாடிய வைபவ், 31 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். அணியின் இன்னிங்ஸை நிலைநிறுத்திய பிறகு, குறிப்பாக ஹெல்மெட்டில் ரபாடா பந்தில் வாங்கிய பிறகு திடீரென கியர் மாற்றிய அவர் அடுத்த 15 பந்துகளில் மட்டும் 46 ரன்கள் குவித்து பெரிய வீரர்களுக்கான விடாப்பிடி மீட்டெழுச்சியைக் காட்டினார்.

இறுதியில், 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அசத்தலான இன்னிங்ஸை அவர் ஆடினார். ஆனால் இந்த ஆட்டத்தின் மிகப் பெரிய சிறப்பு, தனிப்பட்ட சாதனையை விட அணியின் நலனையே முன்னிலைப்படுத்திய அவரது மனப்பான்மையாகும்.

சதத்திலிருந்து வெறும் 4 ரன்கள் தொலைவில் இருந்தபோதும், மெதுவாக விளையாடி மைல்கல்லை எட்ட முயலாமல், அணிக்காக அதிரடியாக ரன்கள் சேர்க்கும் முயற்சியையே அவர் தொடர்ந்தார். அந்த அணுகுமுறையே அவரது 96 ரன்கள் இன்னிங்ஸை ஒரு சாதாரண ஆட்டமாக அல்லாமல், மறக்க முடியாத சிறப்பான இன்னிங்ஸாக மாற்றியது. முந்தைய பிளே ஆஃப் ஆட்டத்திலும் 29 பந்துகளில் சதம் அடித்து ஆல்டைம் டி20 குறைந்த பந்து சத சாதனையை முறியடிக்க வாய்ப்பிருந்தும் நேற்று அவுட் ஆன அதே ஷாட்டில் அன்றும் ஆட்டமிழந்தார்.

நேற்றைய வைபவ் இன்னிங்ஸில் தெரிந்தது என்னவெனில் தான் ஒரு வெறும் சிக்ஸ் ஹிட்டிங் மெஷின் அல்ல, சூழ்நிலைக்குத் தக்கவாறும், பந்து வீச்சின் தரநிலைகளைக் கணித்து அதற்கேற்பவும், களவியூகத்தை ஏமாற்றி ரன் குவிக்கும் திறமையும் பொறுமையும் துணிச்சலும் மிகுந்த இன்னிங்சையும் தன்னால் ஆட முடியும் என்று நிரூபித்ததே.

SCROLL FOR NEXT