அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுக்கு கஜகஸ்தானின் எலீனா ரைபகினா, அமெரிக்காவின் கோகோ காஃப் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் எலீனா ரைபகினா, ஸ்பெயின் வீராங்கனை ஜெஸ்ஸிகா பவுசாஸ் மனேரோவுடன் மோதினார்.
இதில் ரைபகினா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஜெஸ்ஸிகாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஒரு மணி நேரம் 8 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அதேபோல் மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காஃப் 6-4, 7-6(5) என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவை தோற்கடித்தார்.
மற்ற மகளிர் பிரிவு 2-வது சுற்று ஆட்டங்களில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் இவா லிஸையும், செக். குடியரசின் நிக்கோலா பார்டுன்கோவா 6-7 (5/7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவையும், ஆஸ்திரியாவின் அனஸ்டாசியா போடபோவா 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் லியாலியா ஜீன்ஜீனையும், அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் லில்லி டாகரையும், அமெரிக்காவின் இவா ஜோவிக் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் பிரான்செஸ்கா ஜோன்ஸையும், பிலிப்பைன்ஸின் அலெக்சான்ட்ரா இலா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஒலினிகோவாவையும் வீழ்த்தினர்.
இகா ஸ்வியாடெக் அபாரம்
போலந்து வீராங்கனையும், தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவருமான இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என்ற நேர் செட்ககளில் அர்ஜெண்டினாவின் நாடியா போடோரோஸ்காவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் அமெரிக்க வீராங்கனையும், தரவரிசையில் 22-வது இடத்தில் இருப்பவருமான மாடிசன் கீஸ் 5-7, 6-4, 7-6 (10/5) என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் அன்னா போண்டாரைச் சாய்த்தார்.
ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கேத்ரினா சினியாகோவாவை சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஜிவரேவ் வெற்றி
ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுக்கு ஜெர்மனி வீரரும், தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான அலெக்சாண்டர் ஜிவரேவ் முன்னேறியுள்ளார். அவர் 2-வது சுற்றில் 6-4, 4-6,
7-6 (7/3), 6-7 (3/7) 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் குவென்டின் ஹாலிஸை போராடி வீழ்த்தினார்.
மற்ற ஆடவர் பிரிவு 2-வது சுற்று ஆட்டங்களில் சீனாவின் அலெஜான்ட்ரோ தபிலோ 2-6, 7-6 (7/4), 7-6 (7/3), 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்பிரின்னையும், இத்தாலி வீரர் லூசியானோ டார்டெரி 6-3, 6-7 (5/7), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் செக் குடியரசு வீரர் டாலிபர் ஸ்வர்சினாவையும், பிரான்ஸின் பெஞ்சமின் போன்சி 6-2, 7-6 (7/4), 6-0 என்ற செட் கணக்கில் பெரு நாட்டு வீரர் இக்னாசியோ புசேவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.