நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-3, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 113-ம் நிலை வீரரான சீனாவின் யூ யிபிங்கை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார்.
7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், 26-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஆர்தர் ரின்டர்கெனெக்கை எதிர்த்து விளையாடினார். இதில் மேத்வதேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 7-6 (7-3), 6-7 (5-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 48-ம் நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ்வையும், 11-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்செஸ் தியாபோ 6-4, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் 22-ம் நிலை வீரரான மோனாக்கோவின் வாலண்டின் வச்செரோட்டையும், 27-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் தாமஸ் எச்செவெரி 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 49-ம் நிலை வீரரான மரியானோ நவோனேவையும் வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தனர்.
15-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக் 4-6, 6-3, 7-6 (7-4), 1-6, 3-6 என்ற செட் கணக்கில் 20-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பாலிடம் தோல்வி அடைந்தார். இதேபோன்று 18-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-2, 1-6, 6-7 (3-7), 1-6 என்ற செட் கணக்கில் 53-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸிடம் வீழ்ந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 31-ம் நிலை வீராங்கனையான கனடாவின் லைலா பெர்னாண்டஸையும், 11-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்தா கோஸ்ட்யுக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 18-ம் வீராங்கனையான ரஷ்யாவின் கேத்ரினா அலெக்ஸாண்ட்ரோவாவையும் வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தனர்.
7-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா முச்சோவா 3-6, 5-7 என்ற செட் கணக்கில் 26-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோவிடமும், 9-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் 21-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயாவிடமும் தோல்வி அடைந்தனர்.
15-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் டயானா ஷினைடர் 2-6, 7-6 (7-3), 3-6 என்ற செட் கணக்கில் 96-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டிடம் வீழ்ந்தார். 16-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தார்.
செரீனா - வீனஸ் ஜோடி தோல்வி
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன்களான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஜோடியானது சீனதைபேவின் ஹாவோ-சிங் சான், ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயின்ட் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 3 மணி நேரம் 2 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி 3-6, 7-6 (8-6), 6-7 (7-10) என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.