தரம்சாலா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 57, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 38 ரன்கள் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் ஷர்துதல் தாக்குர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 33 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்களும், வில் ஜேக்ஸ் 10 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்ட மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது.
அதேவேளையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 5-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியான தோல்விகளால் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாமல் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.
பஞ்சாப் அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (17-ம் தேதி) ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது: நிச்சயமாக, இது ஜீரணிக்க முடியாத கடினமான தோல்விதான். ஆனால், இதற்காக நான் எந்தவொரு குறிப்பிட்ட சூழலையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஏனெனில், இது சிறந்த கிரிக்கெட் போட்டி. இரு அணிகளும் மிகச்சிறப்பாகப் போராடினோம்.
திலக் வர்மா அற்புதமாக விளையாடினார், பந்துகளைத் தேர்ந்தெடுத்து அடித்த விதம் அருமை, மேலும் ஃபீல்டிங்கிற்கு ஏற்றவாறு பந்துகளை லாவகமாக திசை திருப்பி விளையாடினார். எனவே இந்த வெற்றிக்கு அவர் தகுதியானவர், பேட்டிங்கின் போது நாங்கள் ஒரு கட்டத்தில் 170 முதல் 180 ரன்கள் வரை மட்டுமே எடுப்போம் என்று தோன்றியது. ஆனால், அங்கிருந்து அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆட்டத்தின் போக்கை அப்படியே எங்களுக்கு சாதகமாக மாற்றினார்.
அவர், ஸ்கூப் ஷாட்கள் மூலம் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். 16 அல்லது 17-வது ஓவரிலிருந்து எங்களுக்குக் கிடைத்த வேகம் காரணமாகவே 200 ரன்களை எட்டினோம். ஆர்சிபி அணிக்கு ஏதிராக அடுத்து நடைபெற உள்ள ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். இந்த போட்டி பிற்பகலில் நடைபெறுகிறது. எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். அந்த இரண்டு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக அமையும். இவ்வாறு ஸ்ரேயஸ் ஐயர் கூறினார்.