விளையாட்டு

யு-19 உலகக் கோப்பை: இந்தியா - வங்கதேசம் சனிக்கிழமை மோதல்

செய்திப்பிரிவு

புலவாயோ: ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு புலவாயோ நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்தேசம் அணிகள் மோதுகின்றன.

ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மழையால் பாதிக்கப்பட்ட அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஹனில் படேல் 7 ஓவர்களை வீசி 16 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் இளம் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. முதல் போட்டியில் குறைந்த அளவிலான இலக்கை துரத்திய போதிலும் பேட்டிங்கில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே, அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

துணை கேப்டன் விஹான் மல்கோத்ரா, 3-ம் நிலை வீரரான வேதாந்த் திரிவேதி ஆகியோரும் சிறப்பாக செயல்பட தவறினர். நடுவரிசையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் குண்டு பொறுப்புடன் விளையாடி 41 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். இன்றைய ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். பந்துவீச்சில் ஹனில் படேலுக்கு ஆதரவாக தேவேந்திரன் தீபேஷ், அப்ம்ரிஷ், கிஷான் குமார், உத்தவ் மோகன், கனிஷ்க் சவுகான், ஹிலன் படேல் செயல்படக்கூடும்.

இந்திய யு-19 அணி கடைசியாக விளையாடிய 17 ஆட்டங்களில் 14-ல் வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியை சனிக்கிழமை ஆட்டத்திலும் தொடரச் செய்வதில் இந்திய அணி தீவிரம் காட்டக்கூடும். வங்கதேசம் யு-19 அணி அஸிசுல் ஹக்கீம் தலைமையில் களமிறங்குகிறது. துணை கேப்டனாக ஜவாத் அப்ரார் உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இளையோருக்கான ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆயிரம் ரன்களை குவித்துள்ளனர்.

இவர்களுடன் கலாம் சித்திகியும் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். அவர், 857 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த 3 பேரும் இந்திய பந்துவீச்சுக் துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் இக்பால் ஹொசைன், அல் பஹத் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இவர்கள் கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் முறையே 45 மற்றும் 43 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் சமியுன் பஷீர் செயல்படக்கூடும்.

SCROLL FOR NEXT