பயங்கரவாதக் குழுக்கள் உடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஃபிபா உலகக் கோப்பை 2026-க்கு சோமாலியா நடுவர் ஓமர் அர்த்தானுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்தது பரபரப்பாகியுள்ளது.
நடுவர் ஓமர் அர்த்தானுக்கு பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருக்கிறது, அதனால்தான் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ட்ரம்ப் நிர்வாக அதிகாரி ஒருவர் காரணத்தை விளக்கியுள்ளார். ஓமர் அர்த்தான் மீதான இந்தக் குற்றச்சாட்டு கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. இவர் 2025-ம் ஆண்டின் ஆப்பிரிக்கக் கால்பந்தின் இணையற்ற நடுவர் விருதை வென்றவர்.
இந்நிலையில் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் திங்களன்று இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இத்தனைக்கும் இவரிடம் ராஜிய பாஸ்போர்ட்டும் அமெரிக்காவுக்குள் நுழைய விசாவும் உள்ளன.
“குறிப்பிட்ட நபர் ஒருவர் (நடுவர் ஓமர் அர்த்தான்) அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி கோரியிருந்தார். சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் (CBP) கூடுதல் சோதனையின்போது, பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர்களுடனான தொடர்பு உள்ளிட்ட பாதகமான தகவல்கள் கண்டறியப்பட்டன; இதனால், குடியேற்றம் மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் (INA) கீழ் அமெரிக்காவிற்குள் நுழைய அவர் தகுதியற்றவராக ஆனார்,” என்று அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நடுவர் ஓமர் கூறும்போது, 11 மணிநேர குடியேற்றத் துறை விசாரணையை எதிர்கொண்டதாகவும், துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு திரும்பும் விமானத்தில் ஏற்றப்படுவதற்கு முன்பு பல மணிநேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த நடுவர் கூறினார்.
அதன்பிறகு சோமாலியாவின் தலைநகரான மொகாதிஷுவை வந்தடைந்த ஆர்டன், 2030-ல் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் நடுவராகப் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜூன் 2025-ல் பயணத் தடை விதிக்கப்பட்ட 12 நாடுகளில் ஒன்றான சோமாலியா குறித்து, ட்ரம்ப் கடும் விமர்சனக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
“சோமாலியாவைப் பொறுத்தவரை - அது ஒரு நாடே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் - அவர்களிடம் எதுவுமே இல்லை,” என்று அவர் டிசம்பர் 2025-ல் கூறியிருந்தார். “அவர்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு எந்தவொரு கட்டமைப்பும் இல்லை.” என்று கூறியிருந்தார்.
சோமாலியக் குடியேறிகள் “தாங்கள் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்ல வேண்டும்” என்றும், “குப்பையை நம் நாட்டிற்குள் தொடர்ந்து அனுமதித்தால் அமெரிக்கா தவறான பாதையில் சென்றுவிடும்” என்றும் அவர் மேலும் விஷத்தைக் கக்கியது உலகம் அறிந்ததே.