விளையாட்டு

T20 WC 2026: டிம் ஷெய்​பர்ட் 89*, ஃபின் ஆலன் 84* ரன்​கள் விளாசல்: நியூஸிலாந்து அபார வெற்றி

10 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் ஐக்​கிய அரபு அமீரகத்தை வீழ்த்​தி​யது

பெ.மாரிமுத்து

சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் ‘டி’ பிரிவு லீக் ஆட்​டத்​தில் நியூஸிலாந்து - ஐக்​கிய அரபு அமீரகம் அணி​கள் மோதின. டாஸ் வென்ற ஐக்​கிய அரபு அமீரக அணி​யின் கேப்​டன் முகமது வசீம் பேட்​டிங்கை தேர்வு செய்​தார். நியூஸிலாந்து அணி​யில் எந்த​வித மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்​லை.

முதலில் பேட் செய்த ஐக்​கிய அரபு அமீரக அணி தொடக்க வீரரை விரை​வாக இழந்​தது. ஆர்​யன்ஷ் சர்மா 6 பந்துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 8 ரன்​கள் எடுத்த நிலையில ஜேக்​கப் டஃபி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய அலிஷான் ஷராஃபு கேப்​டன் முகமது வசீ​முடன் இணைந்து சீராக ரன்​கள் சேர்த்​தார். பவர்​பிளே​வில் ஐக்​கிய அரபு அமீரகம் 50 ரன்​கள் சேர்த்​தது.

          

இந்த ஜோடி​யின் அபார​மான ஆட்​டத்​தால் ஐக்​கிய அரபு அமீரக அணி 12.1 ஓவர்​களில் 100 ரன்​களை கடந்​தது. அச்சுறுத்​தல் கொடுத்த இந்த ஜோடியை 15-வது ஓவரில் மிட்​செல் சாண்ட்​னர் பிரித்​தார். தனது 14-வது அரை சதத்தை கடந்த அலிஷான் ஷராஃபு 47 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​கள் எடுத்த நிலை​யில் மிட்​செல் சாண்ட்​னர் வீசிய பந்தை மிட்விக்​கெட் திசை​யில் சிக்​ஸரை நோக்கி விளாசி​னார்.

அப்​போது எல்​லைக்​கோட்​டுக்கு அருகே நின்ற மார்க் சாப்மேன் பந்தை துள்​ளிய​வாறு பிடிக்க முயன்​றார். அப்போது நிலை தடு​மாறிய​தால் பந்தை உயர​மாக மைதானத்​துக்​குள் வீசி​யபடி எல்​லைக்​கோட்​டுக்கு வெளியே விழுந்​தார். அந்த தருணத்​தில் அரு​கில் நின்ற டேரில் மிட்​செல் கேட்ச் செய்து அலிஷான் ஷராஃபுவை வெளி​யேற்றி​னார். 2-வது விக்​கெட்​டுக்கு முகமது வசீ​முடன் இணைந்து அலிஷான் ஷராஃபு 107 ரன்​கள் சேர்த்தார்.

அப்​போது ஸ்கோர் 14.2 ஓவர்​களில் 119 ஆக இருந்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஹர்ஷி கவுசிக் 2 ரன்​களில் கிளென் பிலிப்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய மயங்க் குமார், முகமது வசீ​முடன் இணைந்து மட்​டையை சுழற்​றி​னார். கிளென் பிலிப்ஸ் வீசிய 18-வது ஓவரில் இந்த ஜோடி 27 ரன்​களை விளாசி​யது.

இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்​டரிக்​கும், அடுத்த பந்தை சிக்​ஸருக்​கும் விளாசி அசத்​தி​னார் மயங்க் குமார். அடுத்த பந்​தில் உதிரி வாயி​லாக 2 ரன்​கள் எடுத்​தது. இதற்கு மாற்​றாக வீசிய பந்​தில் முகமது வசீம் பவுண்​டரி விரட்​டி​னார். ஆனால் அதை நோபாலாக பிலிப்ஸ் வீசியிருந்​தார்.

இதனால் கிடைத்த ஃப்​ரீஹிட் வாய்ப்​பில் முகமது வசீம் சிக்ஸர் பறக்​க​விட்​டார். அடுத்த 2 பந்​துகளில் 3 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் நியூஸிலாந்து அணி ஒரு ஓவரில் 27 ரன்​களை வாரி வழங்கியது இதுவே முதன்​முறை​யாகும்.

அதிரடி​யாக விளை​யாடிய மயங்க் குமார் 13 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 21 ரன்​கள் எடுத்த நிலையில் லாக்கி பெர்​குசன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய ஷோயிப் கான் 7, முகமது அர்ஃ​பான் 0 ரன்​களில் நடையை கட்​டி​னார். 20 ஓவர்​களில் ஐக்​கிய அரபு அமீரக அணி 6 விகெட்​கள் இழப்​புக்கு 173 ரன்கள் குவித்​தது. டி 20 உலகக் கோப்​பை​யில் அந்த அணி எடுத்த அதி​கபட்ச ரன்​களாக இது அமைந்​தது.

தனது 26-வது அரை சதத்தை விளாசிய கேப்​டன் முகமது வசீம் 45 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 66 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். நியூஸிலாந்து அணி தரப்​பில் மேட் ஹென்றி 2 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். ஜேக்​கப் டஃபி, லாக்கி பெர்​குசன், மிட்செல் சாண்ட்​னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 174 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணிக்கு டிம் ஷெய்​பர்ட், ஃபின் ஆலன் ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது.

இந்த எந்​த​வித தாக்​க​மும் இல்​லாத ஐக்​கிய அரபு அமீரக அணி​யின் பந்​து​வீச்சை நாலாபுறம் வெளுத்து வாங்கி ரன்கள் குவித்​தது. பவர்​பிளே​வில் 78 ரன்​கள் விளாசப்பட்டன. டிம் ஷெய்​பர்ட் 23 பந்​துகளில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்​ஸருடன் தனது 15வது அரை சதத்தை​யும், ஃபின் ஆலன் 27 பந்​துகளில், 3 பவுண்​டரி​கள், 4 சிக்​ஸர்​களு​டன் தனது 7-வது அரை சதத்​தை​யும் கடந்​தனர். இந்த ஜோடி​யின் அதிரடி​யால் நியூஸிலாந்து அணி 8.3 ஓவர்​களி​லேயே 100 ரன்​களை கடந்​தது.

தொடர்ந்து இந்த ஜோடி அதிரடி​யால் மிரட்ட நியூஸிலாந்து அணி 15.2 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 175 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. டிம் ஷெய்​பர்ட் 42 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 89 ரன்​களும், ஃபின் ஆலன் 50 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​களும் விளாசினர். ஆட்ட நாயக​னாக டிம் ஷெய்​பர்ட் தேர்​வா​னார்.

28 பந்​துகளை மீதம் வைத்து 10 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்​கானிஸ்​தான் அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது.

2 வெற்​றிகளின் மூலம் நியூஸிலாந்து அணி 4 புள்ளிகளுடன் ‘டி’ பிரி​வில் முதலிடத்​தில் உள்​ளது. நியூஸிலாந்து அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் வரும் 14-ம் தேதி தென் ஆப்​பிரிக்கா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

இந்த ஆட்​டம் அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மை​தானத்​தில்​ இரவு 7 மணிக்​கு நடை​பெறுகிறது. ஐக்​கிய அரபு அமீரக அணிக்​கு இது முதல்​ தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி தனது 2-வது ஆட்​டத்​தில்​ வரும்​ 13-ம்​ தேதி கனடாவுடன்​ மோதுகிறது. இந்​த ஆட்​டம்​ டெல்​லி​யில்​ பிற்பகல்​ 3 மணிக்​கு நடை​பெறுகிறது.

முதன்முறையாக..

நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஐக்​கிய அரபு அமீரக அணி​யின் முகமது வசீம், அலிஷான் ஷராஃபு 2-வது விக்​கெட்​டுக்கு 107 ரன்​கள் குவித்து அசத்​தினர். டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் முழுநேர அந்​தஸ்து கொண்ட அணிக்கு எதி​ராக உறுப்பு நாட்​டைச் சேர்ந்த அணி 100 ரன்களுக்கு மேலான பார்ட்​னர்​ஷிப்பை அமைப்​பது இதுவே முதன்​முறை​யாகும்.

இதற்கு முன்​னர் 2016-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ராக ஆப்கானிஸ்தான் அணி​யின் முகமது நபி, சமியூல்லா ஷின்​வாரி ஜோடி 98 ரன்​கள் சேர்த்​ததே சாதனை​யாக இருந்தது.

முதல் விக்​கெட்​டுக்கு சாதனை

டி20 உல​கக் கோப்பை தொடரில் சேப்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் ஐக்​கிய அரபு அமீரகத்தை தோற்​கடித்​தது. இந்த ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி​யின் டிம் ஷெய்​பர்ட், ஃபின் ஆலன் ஜோடி முதல் விக்​கெட்​டுக்கு 175 ரன்​கள் குவித்து சாதனை படைத்​தது.

டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் எந்த ஒரு விக்​கெட்​டுக்​கும் குவிக்​கப்​பட்ட அதி​கபட்ச ரன்​களாக இது அமைந்​தது. இதற்கு முன்​னர் 2022ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்​தி​யா​வுக்கு எதிராக இங்​கிலாந்​தின் ஜாஸ் பட்​லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி 170 ரன்​கள் குவித்​ததே சாதனையாக இருந்​தது.

7-வது முறை

டி20 உல​கக் கோப்பை தொடரில் சேப்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் 10 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் ஒரு அணி வெற்றி பெறு​வதுஇது 7-வது முறையாகும்.

19 ஆயிரம் ரசிகர்கள்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நியூஸிலாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. இந்த போட்டியை காண மைதானத்தில் சுமார் 19 ஆயிரத்து 600 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

தாயகத்​துக்கு திருப்பி அனுப்​பட்ட வீரர்

டி20 உலகக் கோப்பை தொடரில் ஐக்​கிய அரபு அமீரக அணி நேற்று சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நியூஸிலாந்து அணி​யுடன் மோதி​யது. இந்த போட்டி தொடங்​கு​வதற்கு முன்​ன​தாக அந்த அணி​யின் நடு​வரிசை பேட்​ஸ்​மே​னான முகமது சோகைப் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்டு அவர், தாயகத்​துக்கே திருப்பி அனுப்​பட்​டார்.

இந்த தகவலை ஐக்​கிய அரபு அமீரக கிரிக்​கெட் வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. முகமது சோகைப், பாகிஸ்​தான் வம்சாவளியை சேர்ந்​தவர் ஆவார்.

முகமது சோகைப்

மைதானத்​தில் ஒலித்த விஜய் பாடல்

டி20 உலகக் கோப்பை தொடரில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் நேற்று நியூஸிலாந்து - ஐக்​கிய அரபு அமீரக அணி​கள் மோதின. இந்த போட்​டியை காண வரும் ரசிகர்​கள் விசில், கொடி, அரசி​யல் விளம்​பரம் தொடர்​பான பொருட்​களை கொண்​டு​வரக்​கூ​டாது என தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் அறி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில் நேற்று போட்டி நடை​பெற்​றுக் கொண்டிருந்த போது ஓவர்​களின் இடைவேளை​யில் நடிகர் விஜய் நடித்த கில்லி படத்​தில் இடம் பெற்ற அப்​படி போடு.. அப்​படி போடு மற்​றும் அர்​ஜுனரு வில்லு உள்​ளிட்ட பாடல்​கள் ஒலிபரப்​பப்பட்டன. இதை ரசிகர்​கள் ஆரவாரம் செய்து கொண்​டாடினர்.

SCROLL FOR NEXT