புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர் திலக் வர்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி சார்பில் டி20, ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருபவர் திலக் வர்மா. விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் விளையாடும்போது தொடை இடுக்கில் கடுமையான வலியினால் அவதிப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்தக் காரணத்தால் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள், சர்வதேச டி20 தொடரில் இருந்து திலக் வர்மா விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஐசிசி டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் தொடங்குகின்றன. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி திலக் வர்மாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
அவர் எப்போது நலமுடன் திரும்புவார் என்பதை விரைவில் தெரிவிப்போம்” என்றார்.நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் திலக் வர்மா விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அவர் பங்கேற்பதும் சந்தேகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.