ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 11,12-வது ஓவர்கள் எங்களது வெற்றியைப் பறித்தன என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பவர்பிளே சென்ற விதத்தைப் பார்க்கும்போது, 220 முதல் 230 ரன்களை எட்டுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால், அவர்கள் அந்த ரன்களை எடுக்க விடாமல் 30 ரன்களைக் குறைத்தது ஒரு சிறந்த பந்துவீச்சு முயற்சியாகும். இதுபோன்ற ஆடுகளங்களில் 200 ரன்களுக்கும் குறைவான இலக்கு இருக்கும்போது அதை எட்ட முடியும் என்று நினைத்தேன். கடைசி 10 ஓவர்களில் எங்களுக்கு சுமார் 84 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனால், அதற்குப் பிறகு வீசப்பட்ட ஓரிரு ஓவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டன. 10 ஓவர்கள் முடிந்த பிறகு, அடுத்த 2 ஓவர்களில் நாங்கள் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தோம்.
11-வது ஓவரை இஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் 1 ரன் மட்டுமே வந்தது. மேலும், சர்ப்ராஸ் கான் விக்கெட் வீழ்ந்தது. அடுத்த ஓவரை வீச வந்த ஷிவாங் குமார் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து டெவால்டு பிரேவிஸை வீழ்த்தினார். இந்த இரண்டு ஓவர்கள் சிஎஸ்கே-வுக்கு பின்னடைவாக அமைந்தது. அதுவே எங்களது வெற்றியைப் பறித்தது.
எனவே, இந்த 2 ஓவர்கள் அவர்களுக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். அதில் இருந்துதான் எங்களது உத்வேகம் மாறத்தொடங்கியது. கடைசி ஓவர்களில் ஓவருக்கு 12 அல்லது 13 ரன்களைத் துரத்துவது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். அதனால், ஹைதராபாத் அணியினரை பாராட்ட வேண்டும். அவர்கள் கடைசி ஓவர்களில் மிகச் சிறப்பாகப் பந்து வீசினர்.
எங்கள் அணியினரின் பந்துவீச்சு கடந்த மூன்று போட்டிகளாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று நான் நினைக்கிறேன். இன்றும் கூட, பவர்பிளேக்குப் பிறகு அனைத்து பந்துவீச்சாளர்களும் அருமையாக பந்துவீசினர். ஆனால், பவர்பிளே ஓவர்களில் கூட, ஹைதராபாத் வீரர் அபிஷேக் அற்புதமாக பேட்டிங் செய்தார் என்று நான் உணர்ந்தேன்.
நாங்கள் சிறப்பாக பந்துவீசியபோதும் அதை அவர் அருமையாக எதிர்கொண்டு அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஜேமி ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ் ஆகிய அனைவரும் தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்தனர். அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர் என்று நான் நினைக்கிறேன். நெருங்கி வந்து தோல்வி கண்டோம். கடைசி ஓவர்களில் வெற்றிக்கு மிக அருகில் வந்தபோதும் ரன்களை எட்ட முடியவில்லை. இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.