கிளாஸ்கோ: கிளாஸ்கோவில் நடைபெறும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளின் சிறந்த செயல்பாடுகளால் இந்தியா பெருமையடைய வேண்டிய தருணம் இது என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக தங்களது திறன்களை வெளிப்படுத்தி பதக்கங்களை வேட்டையாடியுள்ளனர். குறிப்பாக குத்துச்சண்டைப் போட்டியில் 7 தங்கம் உட்பட 10 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
போட்டியின்போது தங்கப் பதக்கம் வென்று நமது நாட்டு தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்படும்போது, அது நம் நாட்டுக்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் மற்றும் அந்த குத்துச்சண்டை வீரருக்கும் ஒரு பெருமைக்குரிய தருணமாக அமைகிறது.
இந்தியாவே பெருமை அடையும் நேரம் இதுவாகும். இந்த உணர்வை ஒரே வார்த்தையில் விவரிக்க முடியாது. கிளாஸ்கோ போட்டியில் குத்துச்சண்டை வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். கடைசி நிமிடம் வரை அவர்கள் போராடுகின்றனர். போட்டியின் இடையே சோர்வடைந்து விட்டுக்கொடுப்பதில்லை. ஏனெனில் அவர்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள்.
தடகள வீரர்களும் பதக்கங்களை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது பிரதமர் மோடி, விளையாட்டுத் துறைக்கு ஆதரவளித்து, வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். போட்டிகள் முடிந்த பிறகு, அவர் வீரர்களைத் தனது இல்லத்துக்கு அழைத்து பாராட்டுகிறார். மத்திய அரசும் இந்திய ஒலிம்பிக் சங்கமும் (ஐஓஏ) ஒரே நோக்கத்துடன் இணைந்து செயல்படுகின்றன. அதனால்தான் இத்தகைய சிறப்பான செயல்பாடுகள் போட்டிகளில் வெளிப்படுகின்றன. மிக விரைவில் நாம் உலகத் தரத்திலான நிலையை அடைவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு பி.டி.உஷா தெரிவித்தார்.