ஹராரே: இந்திய அணி கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாட உள்ளது.
இதனிடையே நேற்று ஹராரே மைதானத்தில் செய்தியாளர்களிடம் இந்திய அணியின் துணை கேப்டன் திலக் வர்மா கூறியதாவது: அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுடனான தொடரின்போது ‘பவர் பிளே’ ஓவர்களில் நான்கு அல்லது ஐந்து விக்கெட்களை நாங்கள் இழந்து விட்டோம். இதனால் அதிலிருந்து மீற முடியாமல் போய்விட்டது.
எனவே, நடுவரிசையில் வரும் வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. களமிறங்கியவுடனேயே அதிரடியாக ஆடி ஆட்டமிழந்து வெளியேறுவதில் எந்தவித பயனும் இல்லை. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆட விரும்பினாலும், சில சமயங்களில் சற்று நிதானத்துடனும் விவேகத்துடனும் செயல்பட வேண்டியது அவசியம்.
இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் உள்ள ஆடுகளச் சூழல்களில் களமிறங்கிய உடனேயே அடித்து ஆட முடியாது. அதே சமயம், அணிக்காக எது தேவையோ அதைச் செய்வதையே நான் எப்போதும் கொள்கையாகக் கொண்டுள்ளேன். அணிக்காக நிதானமாக விளையாட வேண்டிய சூழல் இருந்தால் அதற்கேற்ப ஆடுவேன். அதிரடியாக விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்படித்தான் விளையாடுவேன். இதனால்தான் கடந்த சில ஆட்டங்களில் எனது ஸ்டிரைக் ரேட் குறைந்துள்ளது.
களமிறங்கும்போது முதல் பந்தையே அடித்து விளையாட முடியும் என்பதுதான் என் மனதில் எப்போதும் இருக்கும். ஆனால் அதே நேரத்தில், நான் நாட்டுக்காக விளையாடுகிறேன். துணை கேப்டனாக எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. அணியின் துணை கேப்டனாக நான் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டிய அவசியம் உள்ளது.
அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். கேப்டன் பொறுப்பு என்று வரும்போது இயல்பாகவே ஒருவர் மீது பொறுப்புகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். அதே வேளையில், அயர்லாந்து நாட்டில் நாங்கள் விளையாடும்போது சூழல் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. தற்போது ஜிம்பாப்வேயுடன் டி20 தொடரில் விளையாட உள்ளோம்.
ஜிம்பாப்வே அணியினர் நிச்சயம் சவால் அளிக்கக்கூடிய வகையில் விளையாடுவார்கள். கடந்த ஆண்டு ஜிம்பாப்வேயுடனான தொடரில் அவர்கள் முதல் ஆட்டத்திலேயே வென்றனர். எனவே, ஜிம்பாப்வேயுடனான இந்த சர்வதேச டி20 தொடர் கடினமாக இருக்கும். கடந்த முறை நாங்கள் ஆடியபோது ஆடுகளங்கள் சிறப்பாக இருந்தன. கடந்த ஆண்டு ஜிம்பாப்வேயில் நாங்கள் விளையாடியபோது எங்கள் ஜூனியர் அணியும் அங்கு வந்திருந்தது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த பல வீரர்கள் இப்போது சீனியர் அணியில் உள்ளனர்.
ஜிம்பாப்வேயில் ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து நான் ஜூனியர் அணியில் இருந்த வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்டோரிடம் பேசினேன். இங்குள்ள மைதானங்களைப் பொறுத்தவரை, அதன் பரப்பளவு மிகவும் பெரியதாக இருக்கும். இங்குள்ள சீதோஷ்ண நிலையும் முற்றிலும் வித்தியாசமானது. இங்கு காற்றும் குளிரும் அதிகமாக நிலவுகிறது. இங்கு ஏற்கனவே விளையாடிய அனுபவம் எங்களுக்கு ஒரு சாதகமாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.