உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றின் அழுத்தம் உச்சத்தில் இருந்தது. ஈக்வடாருக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் ஒரே வீரர் மீது குவிந்திருந்தது. 22-வது நிமிடத்தில் பந்தை பெற்ற ஜூலியன் குய்னோன்ஸ், எதிரணியின் டிஃபென்ஸை வேகமாக உடைத்துக் கொண்டு கோல் அடித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு ரவுல் ஜிமெனஸின் கோலுக்கும் உதவினார். அந்த 2-0 வெற்றி மெக்சிகோவை உலகக் கோப்பையின் அடுத்தச் சுற்றுக்கு அழைத்துச் சென்றதோடு, பல ஆண்டுகளாக நாக்-அவுட் சுற்று வெற்றிக்காக காத்திருந்த ரசிகர்களின் கனவையும் உயிர்ப்பித்தது.
1986 உலகக் கோப்பையில் பல்கேரியாவை வீழ்த்திய பிறகு, உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் ஒரு வெற்றிக்காக 40 ஆண்டுகள் காத்திருந்த மெக்சிகோவின் ஏக்கத்துக்கும் அந்த வெற்றி முற்றுப்புள்ளி வைத்தது.
இன்று உலகக் கோப்பை அரங்கில் மெக்சிகோவின் நம்பிக்கை நட்சத்திரமாக கொண்டாடப்படும் இந்த வீரரின் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தால், அது வெறும் கால்பந்து வெற்றியின் கதையாக மட்டுமல்லாமல் வறுமை, வன்முறை, இனவெறி, அடையாளப் போராட்டம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் எழுதப்பட்ட வாழ்க்கைப் பயணமாகவும் அமைந்திருக்கிறது.
வறுமை, வன்முறையை வென்ற கால்பந்து
1997 மார்ச் 24-ஆம் தேதி கொலம்பியாவின் நரின்யோ மாகாணத்தில் உள்ள மகுய் பயான் பகுதியில் ஜூலியன் ஆண்ட்ரெஸ் குய்னோன்ஸ் பிறந்தார். கொலம்பியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள்கூட முழுமையாக கிடைக்காத சூழல் நிலவியது. குடும்பத்தின் பொருளாதார சுமையை அவரது தாய் சுமந்த நிலையில், பல நாட்கள் உணவுக்கே சிரமப்பட்ட சூழலில் தான் ஜூலியன் வளர்ந்திருக்கிறார்.
கால்பந்து மீது ஆர்வம் இருந்தாலும், ஒரு ஜோடி கால்பந்து காலணிகளை வாங்கிக் கொடுக்கும் வசதிகூட குடும்பத்துக்கு இல்லாததால், தெருக்களிலும் மண் பாதைகளிலும் பல நேரங்களில் காலணியின்றி பந்தை உதைத்து விளையாடினார். அவருக்குக் கிடைத்த முதல் பயிற்சி மைதானம் எந்த நவீன விளையாட்டு வளாகமும் அல்ல, மாறாக அது வறுமையால் சூழப்பட்ட தெருக்களாக அமைந்தது.
ஜூலியன் வளர்ந்த பகுதி ஆயுதக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களின் செல்வாக்கு அதிகமாக இருந்த பகுதியாகும். பல இளைஞர்களைப் போல தவறான பாதையில் செல்லும் அபாயம் அவருக்கும் இருந்தது. ஆனால், அவரை காப்பாற்றியது கால்பந்து எனும் பெருங்கவசம்.
கொலம்பியாவின் காலி நகரில் செயல்பட்ட இளைஞர் பயிற்சி அமைப்பான ‘ஃபுட்பால் பாஸ்’ (Fútbol Paz) அணியில் இணைந்த பிறகு அவரது திறமை வெளிச்சத்துக்கு வந்தது. உடல் வலிமை, வேகம் மற்றும் கோல் அடிக்கும் திறன் ஆகியவை பயிற்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தன. இளைஞர் பருவத்திலேயே கோல் அடிக்கும் திறனால் பல கிளப்புகளின் கவனத்தை ஈர்த்தார். அதுவே அவரது வாழ்க்கையை மாற்றிய முதல் பெரிய வாய்ப்பாகவும் அமைந்தது.
மெக்சிகோவில் திறந்த புதிய உலகம்
2015-ஆம் ஆண்டு, 18 வயதில் மெக்சிகோவின் டிக்ரெஸ் யுஏஎன்எல் (UANL) அணி அவரை ஒப்பந்தம் செய்தது. கொலம்பியாவில் கிடைக்காத தொழில்முறை வாய்ப்பு மெக்சிகோவில் கிடைத்தது. ஆரம்பத்தில் லோபோஸ், பியுஏபி உள்ளிட்ட அணிகளுக்கு கடனடிப்படையில் அனுப்பப்பட்டாலும், ஒவ்வொரு வாய்ப்பையும் அவர் சிறப்பாக பயன்படுத்தினார். லோபோஸ் அணிக்காக 28 போட்டிகளில் 16 கோல்கள் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.
பின்னர் அட்லஸ் அணியில் இணைந்த அவர், அந்த அணியின் வரலாற்றையே மாற்றிய வீரராக மாறினார். பல தசாப்தங்களாக லீக் பட்டத்துக்காக காத்திருந்த அட்லஸ் அணிக்கு தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுத் தருவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். அதன்பிறகு கிளப் அமெரிக்கா அணியிலும் வெற்றிகளைத் குவித்தார்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக லீக் பட்டம் வெல்ல முடியாமல் தவித்த அட்லஸ் அணியின் வரலாற்றை மாற்றிய வீரர்களில் ஒருவராக குய்னோன்ஸ் பார்க்கப்படுகிறார். முக்கியமான பிளே-ஆஃப் போட்டிகளில் அடித்த கோல்கள் அவரது ‘பிக் மேட்ச் பிளேயர்’ என்ற அடையாளத்தை வலுப்படுத்தின. 26 வயதிலேயே ஐந்து முறை லிகா எம் எக்ஸ் (Liga MX) சாம்பியன் பட்டம் வென்ற வீரராக அவர் உருவெடுத்தது, வட அமெரிக்க கால்பந்தில் அவரது தாக்கத்தை பெரிதும் வெளிப்படுத்தியது.
மெக்சிகோவின் மகனாக மாறிய கொலம்பியர்
2023-ஆம் ஆண்டு மெக்சிகோ குடியுரிமை பெற்ற குய்னோன்ஸ், தனது கால்பந்து வாழ்க்கைக்கு முக்கிய திருப்புமுனையை வழங்கிய நாடாக மெக்சிகோவை பலமுறை குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் கொலம்பியாவை விட மெக்சிகோ தேசிய அணிக்காக விளையாடும் முடிவை எடுத்தார்.
கொலம்பியாவில் பிறந்த வீரர் மெக்சிகோ தேசிய அணிக்காக விளையாடுவது அனைவராலும் ஒரே மாதிரியாக ஏற்கப்படவில்லை. வெளிநாட்டில் பிறந்த வீரரை தேசிய அணியில் சேர்ப்பது குறித்து விவாதங்கள் எழுந்தன. சிலர் அவரது நாட்டுப்பற்றையே கேள்விக்குள்ளாக்கினர். ஆனால் அதற்கெல்லாம் தனது பதிலை அவர் ஆட்டத்தின் மூலமாக கூறினார். மெக்சிகோவின் ஜெர்சியை அணிந்தபோது, முழு அர்ப்பணிப்புடன், களத்தில் போராடும் வீரராக அவர் ரசிகர்களிடம் மரியாதையைப் பெற்றார்.
லிகா எம் எக்ஸ் (Liga MX) தொடரில் விளையாடிய காலத்தில் ஏராளமான இனவெறி கோஷங்கள் மற்றும் அவமதிப்புகளுக்கு அவர் ஆளானார். குறிப்பாக அவரது ஆப்பிரிக்க வம்சாவளித் தோற்றத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தின. இனவெறி தாக்குதல்களுக்கு அவர் தனது ஆட்டத்தின் மூலமும், கோல்களின் மூலமும் பதிலளித்தார். அதுவே பல இளம் வீரர்களுக்கு ஊக்கமாக மாறியது.
சவுதி லீக்கில் இருந்து உலகக் கோப்பை வரை
கிளப் கால்பந்திலும் குய்னோன்ஸ் தொடர்ந்து அசத்தி வருகிறார். சவுதி ப்ரோ லீக் அணியான அல் காத்சியாவுக்காக விளையாடிய அவர், 2025-26 சீசனில் 33 கோல்கள் அடித்து கோல்டன் பூட் வென்றார். அந்த சீசனில் கோல்டன் பூட்டை வென்றது, குய்னோன்ஸை உலக ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தது. இந்த சிறப்பான ஃபார்மை உலகக் கோப்பையிலும் தொடர்ந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2026 உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்த அவர், செக் குடியரசு மற்றும் ஈக்வடாருக்கு எதிராகவும் கோல் அடித்தார்.
உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் முதல் கோல், குழு சுற்றில் மற்றொரு கோல், நாக்-அவுட் சுற்றில் கோல் மற்றும் அசிஸ்ட் என தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தியதால், இந்தத் தொடரின் முக்கியமான வீரர்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார்.
மெக்சிகோவின் தாக்குதல் வரிசையின் இதயமாகவும் மாறியுள்ளார். ஈக்வடாருக்கு எதிரான போட்டியில் அடித்த கோலும், அசிஸ்டும், அவரது முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. மெக்சிகோ பயிற்சியாளர் ஜாவியர் அகிர்ரே, “அவர் அணிக்கு உடல் வலிமை மட்டுமல்ல, போராட்ட மனப்பான்மையையும் கொண்டு வருகிறார்” என்று பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையின் புதிய நம்பிக்கை
உலகக் கோப்பையின் வெவ்வேறு கட்டங்களில் தொடர்ந்து கோல் அடித்து, மெக்சிகோவின் முக்கிய அட்டாக்கிங் வீரர்களில் ஒருவராக குய்னோன்ஸ் உருவெடுத்துள்ளார். தற்போது அந்த நாட்டின் ரசிகர்களின் மிகப் பெரிய நம்பிக்கையாகவும் மாறியிருக்கிறார். அடுத்த நாக்-அவுட் சவாலிலும் மெக்சிகோவின் பார்வை மீண்டும் குய்னோன்ஸின் மீதே விழுந்துள்ளது.
ஒருகாலத்தில் காலணியின்றி மண் பாதைகளில் பந்தை உதைத்த சிறுவன், இன்று உலகின் மிகப் பெரிய விளையாட்டு மேடையில் ஒரு நாட்டின் கனவுகளை சுமந்து நிற்கிறான். தந்தையின் ஆதரவு இல்லாமல் வளர்ந்தவன், வறுமையை வென்றவன், வன்முறையைத் தாண்டியவன், இனவெறியை எதிர்கொண்டவன், அடையாளச் சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னை நிரூபித்தவன் என்று இவையெல்லாம் ஜூலியன் குய்னோன்ஸின் வாழ்க்கையில் சுவடுகளாக நிற்கின்றன.
இன்று உலகக் கோப்பை அரங்கில் மெக்சிகோவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் குய்னோன்ஸ், கால்பந்து என்பது வெறும் விளையாட்டல்ல, அது வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி என்பதற்கான சாட்சியாகவும் திகழ்கிறார்.
இன்று எஸ்டாடியோ அஸ்டெகா முழுவதும் “குய்னோன்ஸ்... குய்னோன்ஸ்...” என்று ரசிகர்கள் முழங்கும்போது, அது ஒரு வீரருக்கான பாராட்டாக மட்டுமல்லாமல் வறுமையின் இருளிலிருந்து உலகக் கோப்பையின் வெளிச்சம் வரை போராடி வந்த ஒரு மனிதனின் வெற்றிப் பயணத்துக்கான அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.
அதனால்தான் ஜூலியன் குய்னோன்ஸ் அடிக்கும் ஒவ்வொரு கோலும் வெறும் புள்ளிவிவரமாக இல்லாமல், வறுமையையும் வன்முறையையும் இனவெறியையும் தாண்டி கனவுகளை விடாமல் துரத்திய ஒருவரின் வெற்றிச் சின்னமாக மாறியுள்ளது.