முலான்பூர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வென்றது.
நியூசண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஷுப்மன் கில் 126, கே.எல்.ராகுல் 100, ரிஷப் பந்த் 81, வாஷிங்டன் சுந்தர் 52 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 39.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. ரஹ்மத்ஷா 43 ரன்களுடன் களத்தில் இருந்தார். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 58.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. ரஹ்மத் ஷா 60 ரன்களில் மானவ் சுதார் பந்தில் போல்டானார்.
அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 0, ஷராஃபுதின் அஷ்ரப் 11, முகமது சலீம் 0, ஜியாவூர் ரஹ்மான் 6 ரன்களில் நடையை கட்டினர். இந்திய அணி தரப்பில் அறிமுக இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதார் 22 ஓவர்களை வீசி 10 மெய்டன்களுடன் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பாலோ-ஆன் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய நிலையில் மீண்டும் ஒரு முறை சுழற்பந்து வீச்சைதாக்குப்பிடிக்க முடியாமல் 35.5 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக செதியுல்லா அடல் 42, ரஹ்மனுல்லா குர்பாஸ் 24, ரஹ்மத் ஷா 13 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4, குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினர். மானவ் சுதார், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக மானவ் சுதார் தேர்வானார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் அதிக அளவிலான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டியாக இது அமைந்தது. இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு ராஜ்கோட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.