டாக்கா: வங்கதேசம் - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 272 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 105 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.
டேக்நரைன் சந்தர்பால் 43, ஜஸ்டின் கிரீவ்ஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 82.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சந்தர்பால் 56, ஜஸ்டின் கிரீவ்ஸ் 46 ரன்களில் அவுட் ஆனார்கள். ஜோஷுவா பிஷப் 15, ஷமர் ஜோசப் 4 ரன்களிலும் ஜோமல் வாரிக்கன், ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் நடையை கட்டினர்.
கேப்டன் ராஸ்டன் சேஸ் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச அணி தரப்பில் நயீம் ஹசன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். தைஜுல் இஸ்லாம், மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 27 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது.
ஷத்மான் இஸ்லாம் 13, தன்ஷித் ஹசன் தமீம் 0, நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 10, தவுஹித் ஹிர்தோய் 0, லிட்டன் தாஸ் 4, மெஹதி ஹசன் மிராஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜாக்கர் அலி, நயீம் ஹசன் ஆகியோர் தலா 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ராஸ்டன் சேஸ் 3, ஜோமல் வாரிக்கன் 2, ஷமர் ஜோசப் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 106 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள வங்கதேச அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.