விளையாட்டு

“விராட் கோலி விக்கெட்டை விட அணியின் வெற்றியே முக்கியம்” - இளம் வேகப்புயல் பிரின்ஸ் யாதவ்

செய்திப்பிரிவு

லக்னோ: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்டத்​தில் பலம் வாய்ந்த ஆர்சிபி அணியை 9 ரன்​கள் வித்தியாசத்​தில் தோற்​கடித்​தது லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி. மழை​யால் பாதிக்​கப்​பட்ட இந்த ஆட்​டம் 19 ஓவர்​களை கொண்ட போட்​டி​யாக நடத்​தப்​பட்​டது.

முதலில் பேட் செய்த லக்னோ அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 209 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான மிட்​செல் மார்ஷ் 56 பந்துகளில், 9 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 111 ரன்​கள் விளாசினார். கேப்​டன் ரிஷப் பந்த் 10 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​கள் சேர்த்​தார். டக்​வொர்த் லீவிஸ் விதிப்படி 213 ரன்​கள் இலக்கை துரத்​திய ஆர்​சிபி அணி​யால் 19 ஓவர்​களின் முடி​வில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 203 ரன்​கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதி​கபட்​ச​மாக கேப்​டன் ரஜத் பட்​டி​தார் 31 பந்​துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​களும், டிம் டேவிட் 17 பந்துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 40 ரன்​களும் சேர்த்தனர். முன்​ன​தாக விராட் கோலி இரு பந்​துகளை சந்​தித்த நிலை​யில் ரன் ஏதும் எடுக்​காமல் பிரின்ஸ் யாதவ் பந்​தில் ஆஃப் ஸ்டெம்பு சிதற போல்​டா​னார். இந்த பந்தை 140 கிலோ மீட்​டர் வேகத்​தில் பிரின்ஸ் யாதவ் வீசி​யிருந்​தார்.கடந்த ஏப்​ரல் 2023-ல் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யில் முதல் பந்திலேயே ஆட்​ட​மிழந்​ததற்கு பிறகு, ஐபிஎல் தொடரில் கோலி ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தது இதுவே முதல் முறை​யாகும்.

மற்​றொரு தொடக்க வீர​ரான ஜேக்​கப் பெத்​தேல் 4 ரன்​களில் ஷமி பந்​தில் வெளி​யேறி​னார். தேவ்​தத் படிக்​கல் 34 ரன்​களி​லும், ஜிதேஷ் சர்மா ஒரு ரன்​னிலும் பிரின்ஸ் யாதவ் பந்​தில் நடையை கட்​டினர். கிருணல் பாண்​டி​யா, ரோமாரியா ஷெப்​பர்டு ஆகியோர் களத்​தில் இருந்த நிலை​யில் திக்​வேஷ் ராதி வீசிய கடைசி ஓவரில் ஆர்​சிபி அணி​யின் வெற்​றிக்கு 20 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. ஆனால் ஆர்​சிபி அணி​யால் 10 ரன்​கள் மட்​டுமே சேர்க்க முடிந்​தது. கிருணல் பாண்​டியா 16 பந்​துகளில், 28 ரன்​களும் ரோமாரியோ ஷெப்​பர்டு 15 பந்​துகளில் 23 ரன்​களும் சேர்த்​தனர்.

லக்னோ அணி தரப்​பில் பிரின்ஸ் யாதவ் 33 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். ஷாபாஸ் அகமது 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். 9 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற லக்னோ அணி தொடர்ச்​சி​யாக அடைந்த 6 தோல்விகளுக்கு முற்​றுப்​புள்ளி வைத்​தது. தற்​போதைய வெற்றியின் மூலம் லக்னோ அணி 6 புள்​ளி​களு​டன் கடைசி இடத்தில் தொடர்​கிறது. 10 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 3 வெற்​றி, 7 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது.

போட்​டிக்கு பின்​னர் லக்னோ அணி​யின் வேகப்​பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவ் கூறிய​தாவது: விராட் கோலி​யின் விக்​கெட்டை வீழ்த்​தி​யது சிறப்​பான உணர்வை கொடுத்​தது. ஆனால் நாங்​கள் போட்​டி​யில் வெற்றி பெற்​றது​தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்​சி​யைத் தரு​கிறது. விராட் கோலி விக்​கெட்டை வீழ்த்​திய போதி​லும் நாங்கள் தோல்வி அடைந்​திருந்​தால் அது மகிழ்ச்​சியை கொடுத்திருக்​காது. எந்த வித​மாக இருந்​தா​லும் சரி, பந்துவீச்சாளர் விக்​கெட்டை வீழ்த்​தும்​போது அது நல்ல உணர்வைத் தரும்.

அந்த விக்​கெட்டை எடுத்​தால் மட்​டுமே எங்​களால் போட்​டி​யில் வெற்றி பெற முடி​யும் என்ற சூழல் இருந்​தது; அது நிகழ்ந்​த​தில் மிகவும் மகிழ்ச்​சி​யாக உணர்​கிறேன். புதிய பந்​தில் எப்​படி பந்​து​வீச வேண்​டும் என்​பது குறித்து முகமது ஷமி​யிடம் இருந்து நிறைய கற்​றுக்​கொண்​டேன். அவரிடம் இருக்​கும் மிகச்​சிறந்த விஷ​யம் என்​னவென்​றால், ஒரு பந்​து​வீச்​சாளர் பந்​து​வீசும்​போது அவர் மிட்​-ஆன் அல்​லது மிட்​-ஆஃப் திசை​யில் நிற்​பார். அனுபவம் வாய்ந்த வீரர் உங்​களுக்கு அரு​கில் நிற்​கும்​போது, அது நம்​பிக்​கையை கொடுக்​கும்.

கிரிக்​கெட்​டில் வெற்றி தோல்வி​கள் சகஜம். ஆனால் எங்​கள் அணி எங்​களது சிறந்த உழைப்​பைக் கொடுத்து வரு​கிறது. நாங்​கள் பிளே-ஆஃப் சுற்று குறித்து அதி​கம் யோசிக்​காமல், ஒவ்​வொரு போட்​டியை​யும் தனித்​தனி​யாக அணுகி விளை​யாடு​வதைப் பற்றி மட்​டுமே சிந்​தித்து வரு​கிறோம். இவ்​வாறு பிரின்ஸ் யாதவ் கூறினார். 24 வயதான பிரின்ஸ் யாதவ் நடப்பு ஐபிஎல் தொடரில் 16 விக்​கெட்​களை கைப்​பற்றி அதிக விக்​கெட்​கள் வீழ்த்தி உள்ளவர்​களின் பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளார். இந்த வகையில் புவனேஷ்வர் குமார் (ஆர்​சிபி), அன்​ஷுல் கம்​போஜ் (சிஎஸ்​கே) ஆகியோர்​ தலா 17 விக்​கெட்​களை வீழ்த்​தி ​முதல்​ 2 இடங்​களில் உள்ளனர்.

SCROLL FOR NEXT