பெங்களூரு: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய போட்டி நடைபெறும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதான ஆடுகளம் தட்டையானது.
மேலும் குறுகிய பவுண்டரிகள் கொண்டதால் இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும். இருப்பினும், கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்த மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்தக் காலகட்டத்தில் ஐபிஎல் தொடரின் சில ஆட்டங்களைத் தவிர, பெரிய அளவிலான போட்டிகளும் நடைபெறவில்லை.
இதனால், ஆடுகளத்தின் தற்போதைய தன்மையைப் பற்றி இரு அணிகளுக்கும் போதிய பரிச்சயம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இது இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை ஓரளவுக்குச் சமநிலைப்படுத்தக்கூடும். இந்தச் சூழலில், இந்திய அணி குல்தீப் யாதவை மீண்டும் விளையாடும் லெவனில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கக்கூடும்.
ஏனெனில் அவர் கடைசி 2 ஆட்டங்களில் அணியில் சேர்க்கப்படவில்லை. இதுஒருபுறம் இருக்க வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த போட்டியில் பேட்டிங்கின் போது காயம் அடைந்தார். இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது. இதனால் அவருக்கு மாற்ற இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சீனியர் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் புவனேஷ்வர் குமார், பெங்களூரு ஆடுகளத்தில் கடந்த 2 சீசன்களாக உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் அவர், மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி நடப்பு தொடரில் உலக சாம்பியனான இந்திய அணிக்கு கடும் சவால் அளித்து வருகிறது. ஷாய் ஹோப் 2 சதங்கள், ஒரு அரை சதத்துடன் 261 ரன்கள் விளாசி மிரட்டி உள்ளார்.
மற்றொரு அதிரடி பேட்ஸ்மேனான ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 2 அரை சதங்களுடன் 221 ரன்களைக் குவித்துள்ளார். இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் பந்துவீச்சை வரிசையை கடும் சோதனைக்கு உட்டபடுத்தக்கூடும். இதற்கிடையே கடந்த
சில நாட்களாக பெங்களூரு நகரில் மழை பெய்து வருகிறது. நகர் பகுதியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஸ்ரேயஸ் ஐயருக்கு நெருக்கடி
இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால், கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயரின் மதிப்புக்கும் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி தோல்விகளைச் சந்தித்து இருந்தது. எனினும் பலம் குறைந்த ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான வெற்றிகள் மூலம் ஸ்ரேயஸ் ஐயர் இழந்த நற்பெயரை ஓரளவு மீட்டெடுத்தார்.
தற்போதைக்கு அவரது கேப்டன் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும், அனுபவமும் அதிரடித் திறனும் கொண்ட எதிரணிக்கு எதிராக நெருக்கடியான சூழல்களில் அணியைச் சரியான பாதையில் வழிநடத்தும் ஸ்ரேயஸ் ஐயரின் கேப்டன்ஷிப் திறன் குறித்து கேள்விகள் எழும்.