விளையாட்டு

வரும் 22-ல் இந்தியா, ஜப்பான் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா, ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு கால தூதரக ரீதியிலான நட்புறவை குறிக்கும் வகையில் வரும் 22-ம் தேதி இந்தியா, ஜப்பான் அணிகள் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்தியா, ஜப்பான் ஆடவர் கிரிக்கெட் அணிகள் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி 22-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்தியா, ஜப்பான் இடையிலான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முதல் முறையாக இந்த டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு 'சுசூகி கோப்பை' என பெயரிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவுகளின் கொண்டாட்டத்தின் முதல் படியாக இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான உலக சாம்பியன் இந்திய அணி ஜப்பானில் முதல் முறையாக விளையாட உள்ளதால், இது ஜப்பான் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமாக நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT