கொழும்பு: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி வரும் 15 முதல் 19 வரை காலே நகரிலும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 23 முதல் 27 வரை கொழும்பு நகரிலும் நடைபெறுகின்றன.
முன்னதாக இந்திய அணி 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இலங்கை பிரதமர் லெவன் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பு நகரில் உள்ள நான்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்திய அணி கடந்த இரு தொடர்களிலும் சொந்த மண்ணில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சுழற்பந்துவீச்சில் மோசமாக விளையாடி தோல்விகளை சந்தித்து இருந்தது. இதனால் சுழலுக்கு சாதகமாக இருக்கும் இலங்கை ஆடுகளங்களும் இந்திய அணிக்கு சவாலாக அமையக்கூடும். இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தை பயன்படுத்திக்கொள்ளும்.
இதற்கிடையே இலங்கை புறப்படுவதற்கு முன்னதாக ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் பயிற்சிகளைத் தனிப்பட்ட முறையில் தொடங்கியிருந்தனர். இருப்பினும், அது இலங்கை ஆடுகளத்தில் விளையாடும் அனுபவத்துக்கு கைகொடுக்குமா? என்பது சந்தேகமே.
அந்த வகையில் இன்று தொடங்கும் பயிற்சி போட்டியானது உள்ளூர் சூழ்நிலைகளை இந்திய அணி வீரர்கள் தகவமைத்துக்கொள்ள உதவக்கூடும். ஏனெனில், அணியில் இடம் பெற்றுள்ள பல வீரர்கள் முதன்முறையாக இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.
இந்திய அணி கடைசியாக 2017-ம் ஆண்டு இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தது. அந்தத் தொடரில் விளையாடிய கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே தற்போதைய அணியிலும் உள்ளனர்.
ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளதால் வேகப்பந்து வீச்சு துறையை முகமது சிராஜ் வழிநடத்தக்கூடும். பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் ஆகியோர் உறுதுணையாக செயல்படக்கூடும். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவுடன் மானவ் சுதார், சரண்ஷ் ஜெயின் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும்.
இந்நிலையில், கொழும்பு நகரில் இன்று விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பயிற்சி போட்டி பாதிக்கப்படக்கூடும். இலங்கை பிரதமர் லெவன் அணி சோனல் தினுஷா தலைமையில் களமிறங்குகிறது.
அவர், இலங்கை அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். பிரதமர் லெவன் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களான இஷிதா விஜேசுந்தரா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.