வெலிங்டன்: நியூஸிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 121 ஓவர்களில் 368 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 125 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 486 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 55 ரன்களுடனும், அன்ஷுல் கம்போஜ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ரிஷப் பந்த் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ரன்கள் குவித்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய அன்ஷுல் கம்போஜ் 42 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் வீசிய சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு அன்ஷுல் கம்போஜ், ரிஷப் பந்த் ஜோடி 85 பந்துகளில், 68 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய துருவ் ஜூரல், ரிஷப் பந்த்துடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
மட்டையை சுழற்றிய ரிஷப் பந்த் 135 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் தனது 9-வது சதத்தை விளாசினார். அபாரமாக விளையாடி வந்த ரிஷப் பந்த் 153 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் விளாசிய நிலையில் ரச்சின் ரவீந்திரா பந்தில் மிட்விக்கெட் திசையில் நின்ற நேதன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
6-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த், துருவ் ஜூரல் ஜோடி 84 பந்துகளில், 75 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 24, ஆகாஷ் தீப் 13 ரன்களில் நடையை கட்டினர். தனது 3-வது அரை சதத்தை கடந்த துருவ் ஜூரல் 121 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார். அப்போது இந்திய அணி 166 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 720 ரன்கள் குவித்திருந்தது.
ஜஸ்பிரீத் பும்ரா 7 ரன்களுடன் களத்தில் இருந்தார். அத்துடன் இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் மூலம் நியூஸிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு ஹாமில்டனில் வங்கதேசத்துக்கு எதிராக நியூஸிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 715 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
மேலும், நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 700 ரன்களை குவித்த முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன்பு 1995-ம் ஆண்டு வெலிங்டனில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 660 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
அத்துடன் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் 1999-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 583 ரன்கள் குவித்திருந்தது.
நடப்பு டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி தரப்பில் 7 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். கிளென் பிலிப்ஸ் 3, ரச்சின் ரவீந்திரா 2 விக்கெட்களை வீழ்த்தினர். மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி, நேதன் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
352 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 45 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. கேப்டன் டாம் லேதம், பும்ரா வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் விளாசிய ஹென்றி நிக்கோல்ஸ் இம்முறை 59 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில், ஷார்ட் லெக் திசையில் நின்ற துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
டெவன் கான்வே 59, ரச்சின் ரவீந்திரா 27 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 233 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது நியூஸிலாந்து அணி.
முதல் ஆசிய விக்கெட் கீப்பர்
‘சேனா’ நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். மேலும், இந்த நான்கு நாடுகளிலும் டெஸ்ட் சதம் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் தனது 9-வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்ததன் மூலம் ரிஷப் பந்த் இந்த மைல்கல்லை எட்டினார். ‘சேனா’ நாடுகளில் இதற்கு முன்னர் இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், ராகுல் திராவிட், விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரும் சதம் அடித்துள்ளனர்.
வெலிங்டன் டெஸ்டில் குவிக்கப்பட்ட சாதனைகள்
>> நியூலிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 720 ரன்கள் குவித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோரும் இதுவே. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு கொழும்பில் இலங்கைக்கு எதிராக 707 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆசியாவுக்கு வெளியே 2004-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த 705 ரன்களே முந்தைய சாதனையாகும்.
>> டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா இதுவரை 5 முறை 700 ரன்களைக் கடந்துள்ளது. இந்த வகை சாதனையில் இலங்கை 7 முறை 700 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளது.
>> வெலிங்டன் டெஸ்டில் இந்திய அணியின் முதல் 7 விக்கெட்டுகளுக்கும் தலா 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இத்தகைய நிகழ்வு பதிவாவது இதுவே முதல்முறையாகும்.
>> இந்திய அணியின் இன்னிங்ஸில் 6 வீரர்கள் தனிப்பட்ட முறையில் 70 ரன்களுக்கு மேல் எடுத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இத்தகைய நிகழ்வு பதிவாவது இதுவே முதல்முறையாகும். இதில் முதல் 5 பேட்டர்களும் தலா 80 ரன்களுக்கு மேல் எடுத்தனர். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு அபுதாபியில் நியூஸிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி இதேபோன்ற சாதனையைப் படைத்திருந்தது.
>> வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தனது 9-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன் வாயிலாக விக்கெட் கீப்பர்களில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் (17), ஆண்டி பிளவர் (12) ஆகியோருக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில்
உள்ளார். பந்த் அடித்த 9 சதங்களில் 7 சதங்கள் வெளிநாட்டு மண்ணில் அடிக்கப்பட்டதாகும்.
>> டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்த் இதுவரை 108 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் 107 சிக்ஸர்கள் அடித்த பிரெண்டன் மெக்கல்லத்தை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் 138 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
>> வெலிங்டன் டெஸ்டில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர், சிக்ஸர் விளாசி சதத்தை கடப்பது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பு 2018-ல் ஓவல், 2021-ல் அகமதாபாத், 2025-ல் ஹெட்டிங்லி ஆகிய மைதானங்களில் இவ்வாறு சதமடித்துள்ளார். இந்த வகை சாதனையில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர், 6 முறை சிக்ஸர்கள் விளாசி சதம் அடித்துள்ளார்.
>> வெலிங்டன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 14 சிக்ஸர்களை அடித்தது. இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு கிறைஸ்ட்சர்ச்சில் இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்தும் 14 சிக்ஸர்களை அடித்திருந்தது. தற்போது இந்த சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது.
>> இந்திய வீரர்கள் அடித்த 14 சிக்ஸர்களில் 9 சிக்ஸர்கள் கிளென் பிலிப்ஸ் பந்துவீச்சில் கிடைத்தன. டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் நியூஸிலாந்து பந்துவீச்சாளர் ஒருவர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச சிக்ஸர் இதுவாகும். ஒட்டுமொத்தமாக 2010-ம் ஆண்டு மும்பையில் இந்தியாவுக்கு எதிராக ரங்கனா ஹெராத் 10 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக உள்ளது.