விளையாட்டு

இலங்கை லெவனுடன் இந்திய அணி மோதும் ஆட்டம் 3 நாட்களாக குறைப்பு

செய்திப்பிரிவு

மும்பை: இலங்கை லெவன் கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி மோதும் ஆட்டம் 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. காலேவில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், கொழும்புவில் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.

இதனிடையே இலங்கைக்கு முன்னதாகவே செல்லும் இந்திய அணி, வரும் 7-ம் தேதி இலங்கை லெவன் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது, இது 3 நாள் ஆட்டமாக குறைக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ நேற்று தெரிவித்துள்ளது. இந்தப் போட்டி 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

இலங்கை செல்லும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் சரன்ஷ் ஜெயின் என்ற அறிமுக வீரர் இடம் பிடித்துள்ளார். 33 வயதான இவர் இடது கைது பேட்ஸ்மேன் ஆவார். மேலும் வலது கையில் சுழற்பந்து வீசும் திறமையையும் படைத்தவர்.

இலங்கை தொடருக்கான இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த், சாய் சுதர்ஷன், ரவீந்திர ஜடேஜா, சரன்ஷ் ஜெயின், மானவ் சுதர், ஜஸ்பிரீத் பும்ரா, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

SCROLL FOR NEXT