நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிரெண்ட் போல்ட்
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இறுதியில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் நவம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடர் குறித்து நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட் கூறும்போது, ‘‘நான் எப்போதுமே கே.எல்.ராகுல் மற்றும் அவரது பேட்டிங் பாணியின் தீவிர ரசிகன். இந்திய அணியின் தொடக்க வரிசையில் அவர், முக்கியமானவர். அவருடன் ஜெய்ஸ்வாலும் இருக்கிறார்.
இவர்கள் இருவரும் தரமான பேட்டர்கள். இதனால், போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். இந்திய அணி நியூஸிலாந்துக்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் அது எங்களுக்கு உற்சாகமாக இருக்கும்.
டெஸ்ட் தொடரின் போது குளிர் சற்று அதிகமாக இருக்கும். இதனால் ஆடுகளம் பசுமையாக இருக்கும் என்பதால் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். இது ஒரு நல்ல தொடராக இருக்கும்’’ என்றார்.