கொழும்பு: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நேற்று இலங்கை சென்றடைந்தது. இந்த அணியுடன் இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் பயணிக்கவில்லை.
சுதர்சன் கால் விரல் காயத்தில் இருந்து குணமடைந்து வரும் நிலையில், அவர் தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ திறன்மிகு மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக அவர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வலைப் பயிற்சியில் பேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அடுத்த 3 முதல் 4 நாட்கள் அவர், தொடர் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்.
இதன் பின்னரே அவரது உடற்தகுதி குறித்து பிசிசிஐ மருத்துவக்குழு முடிவு செய்யும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை சென்றுள்ள இந்திய அணி வரும் 7-ம் தேதி கொழும்பு நகரில் உள்ள நான்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் பயற்சி ஆட்டத்தில் கலந்துகொள்கிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி முடிவடைந்தவுடன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் காலே நகருக்கு இந்திய அணி புறப்பட்டுச் செல்லும். காலே சர்வதேச மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் 23-ம் தேதி தொடங்குகிறது.