ஹர்திக் பாண்டியா
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த சூழலில் வரும் 13-ம் தேதி முதல் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
ஷுப்மன் கில் தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார். அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடிய போது முதுகு பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட அவர் உடற்தகுதி பெற்றதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் அவருக்கு தற்போது தொடையின் முன்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த தொடரில் அவர் விளையாடுவது கடினம் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
32 வயதான ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்காக 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 1,904 ரன்கள், 91 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்திய டி20 அணியிலும் அவர் விளையாடி வருகிறார். 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக 2018-ல் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை.