இந்திய வீரர் ஷமி

 
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ஷமி ஓய்வு

வேட்டையன்

புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி அறிவித்துள்ளார். இதன்மூலம் அவரது 13 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

36 வயதான ஷமி, இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன்மூலம் 229 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இதில் வெளிநாடுகளில் மட்டும் 153 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து விதமான ஆடுகள சூழலுக்கும் ஷமியின் பந்துவீச்சு கச்சிதமாக பொருந்தும். அவரது பந்துவீச்சு அணுகுமுறை மிகவும் எளிதானதாக இருக்கும்.

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஷமி விளையாடி இருந்தார். அதன் பின்னர் மூன்று வித ஃபார்மெட்டிலும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவும் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்கிய 15 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு பட்டியலில் வைத்துள்ளதாக தகவல். இதில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்த நிலையில் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ளார்.

“வெள்ளை நிற சீருடைக்கு நான் விடை தருகிறேன். ஆனால், அதன் நினைவுகள் என்னுள் நிறைந்திருக்கும். முதல் முறையாக இந்திய அணியின் டெஸ்ட் ஜெர்சியை அணிந்த போது நான் எண்ணியது ஒன்றே ஒன்றுதான். ‘தேசத்துக்காக ஏதேனும் செய்ய வேண்டும்’ என்று அப்போது விரும்பினேன். அப்போதில் இருந்து ஒவ்வொரு விக்கெட்டும், காயமும், மீண்டு வந்த தருணமும், போராட்டமும் எனக்கு சில பாடங்களை கொடுத்தன.

டெஸ்ட் கிரிக்கெட் எனது வாழ்வில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. இன்று கனத்த இதயத்துடன், அழகான நினைவுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று ஷமி தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ல் நவ.6-ம் தேதி அன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி அறிமுகமாகி இருந்தார். இந்நிலையில், அதே நாளில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT