கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் காயம் அடைந்த இஷான் கிஷனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டார். மேலும் மயங்க் யாதவ் நீக்கப்பட்டு பிரின்ஸ் யாதவ் களமிறக்கப்பட்டார்.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 43 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 70 ரன்களும், பெவன் ஜேக்கப்ஸ் 46 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் விளாசினர்.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார், பிரின்ஸ் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 181 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 10.5 ஓவர்களில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்தது. சஞ்சு சாம்சன் 17 பந்துகளில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக்கப் டஃபி பந்திலும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்திலும் ஆட்டமிழந்தனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 8 பந்துகளில், 4 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் ஸ்மித் பந்தில் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 11 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தில் போல்டானார். அக்சர் படேல் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்த 2 விக்கெட்களையும் சாண்ட்னர் ஒரே ஓவரில் வீழ்த்தியது இந்திய அணிக்கு நெருக்கடியை உருவாக்கியது. இதையடுத்து திலக் வர்மாவுடன் இணைந்த நமன் திர் மட்டையை சுழற்றினார். அதிரடியாக விளையாடிய நமன் திர் 17 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் சாண்ட்னர் பந்தில், கிளென் பிலிப்ஸிடம் எக்ஸ்டிரா கவர் திசையில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில் நேதன் ஸ்மித் வீசிய 19-வது ஓவரில் 18 ரன்கள் கிடைத்தது. ஜேக்கப் டஃபி வீசிய கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.
முடிவில் இந்திய அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக திலக் வர்மா தேர்வானார்.
5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வரும் 27-ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.