விளையாட்டு

301 ரன் இலக்கை விரட்டிய இந்தியா: நியூஸிலாந்தை வீழ்த்தி அபாரம் - IND vs NZ முதல் ODI

வேட்டையன்

வதோதரா: நியூஸிலாந்து அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்ஷித் ராணா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று வதோதராவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.

நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. கான்வே 56, ஹென்றி நிக்கோல்ஸ் 62, டேரில் மிட்செல் 84 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்திருந்தார்.

301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ரோஹித், 29 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் இணைந்து 118 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஷுப்மன் கில். 71 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார்.

தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயர் உடன் 77 ரன்கள் கூட்டணி அமைத்தார் விராட் கோலி. 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து கோலி தன் விக்கெட்டை இழந்தார். அவர் கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸில் தொடர்ந்து 50+ ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதன் பின்னர் வந்த ஜடேஜா 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஒரே ஓவரில் கோலி மற்றும் ஜடேஜா விக்கெட்டை நியூஸிலாந்து பவுலர் ஜேமிசன் கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்ஷித் ராணா இணைந்து 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆட்டத்தில் அழுத்தம் கூடியிருந்த நிலையில் இந்த கூட்டணி இந்திய அணிக்கு முக்கியமானதாக அமைந்தது. ராணா, 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் இருந்த கே.எல்.ராகுல் 29 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 7 ரன்னும் எடுத்தனர்.

49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை (20 போட்டிகள்) 300+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டிய அணியாக இந்தியா உள்ளது. இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இதில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.

SCROLL FOR NEXT