இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்
கொழும்பு: இலங்கை - இந்தியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்பு நகரில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்திய அணி கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. அதன் பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருந்தது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை சமன் செய்திருந்தது.
தொடர்ந்து தனது சொந்த மண்ணில் நடைபெற்ற நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக பறிகொடுத்து இருந்தது இந்திய அணி. இந்த தோல்விகள் இந்திய அணியின் பிம்பத்தை வெகுவாக பாதித்து இருந்தது.
எனினும் கடந்த வாரம் காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் வாயிலாக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சுழற்பந்து வீச்சு ஆடுகளத்தில் தன்னம்பிக்கையை மீட்டெடுத்தது. மேலும் அணியின் மீதான அழுத்தத்தையும் வெகுவாக குறைத்தது.
முதல் டெஸ்ட் வெற்றியின் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், கேப்டன் ஷுப்மன் கில், தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கத் தவறினர். கடந்த 6 இன்னிங்ஸ்களில் 2 சதங்களை விளாசியுள்ள ஷுப்மன் கில் சிறந்த ஃபார்மில் இருப்பது போலத் தோன்றும். ஆனால், சற்று உற்றுநோக்கினால் அவரது ஆட்டத்தில் பலவீனம் தென்படும். இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளில் அவர், தொடர்ச்சியாக ஒரே பாணியில் ஆட்டமிழந்து வருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது.
காலே டெஸ்டிலும் ஷுப்மன் கில் இரு இன்னிங்ஸ்களிலுமே பிரபாத் ஜெயசூரியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக பயிற்சியின் போது இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிக நேரம் பேட்டிங் செய்துள்ளார் ஷுப்மன் கில். இதற்கு கொழும்பு டெஸ்ட் போட்டியில் பலன் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனது தலைமையில் வெளிநாட்டு மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற சவாலும் ஷுப்மன் கில்லின் முன் உள்ளது.
இந்த இரு இலக்குகளையும் ஷுப்மன் கில் ஒரே நேரத்தில் சாதித்துக் காட்டும் பட்சத்தில், சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்திய அணியின் வெற்றியைத் தடுப்பது இலங்கை அணிக்கு கடினமான ஒன்றாகவே இருக்கும். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பிரச்சினை சற்று ஆழமானது. கடந்த ஆண்டு டெல்லியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகச் சதம் விளாசிய பிறகு, ஜெய்ஸ்வால் தனது கடந்த 8 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதத்தை மட்டுமே எடுத்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஷுப்மன் கில் திணறுவது போல, வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளில் ‘கட்’ அல்லது ‘சிப்’ ஷாட்களை விளையாட முயன்று ஆட்டமிழப்பதை ஜெய்ஸ்வால் வழக்கமாக்கிக் கொண்டு வருவது கவலையளிக்கும் விஷயமாக உருவெடுத்துள்ளது.
காலே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன் அவுட் ஆன ஜெய்ஸ்வால், 2-வது இன்னிங்ஸில் அசிதா பெர்னாண்டோ வீசிய ஷார்ட்பிட்ச் பந்தை ‘கட்’ செய்ய முயன்றபோது விக்கெட் கீப்பர் நிரோஷன் திக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.தனது ஆட்டத்தில் உள்ள இந்தத் குறையைச் சரிசெய்வதற்காக வலைப்பயிற்சியில் ஜெய்ஸ்வால் கூடுதல் நேரம் செலவிட்டார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கலும் ஆஃப்-ஸ்டெம்புக்கு வெளியே அதே லைனில் தொடர்ச்சியாகப் பந்துகளை வீசி, ‘பாயிண்ட்’ திசையில் ‘கட்’ அல்லது ‘சிப்’ ஷாட் ஆட ஜெய்ஸ்வாலுக்கு வலை விரித்துப் பயிற்சி அளித்தனர்.
இந்த சவாலைச் சிறப்பாக எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், ஆஃப்-ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்துகளை அடிக்க முயற்சிக்காமல் கவனமாக விட்டு விளையாடினார். போட்டிக் களத்திலும் இதே கட்டுப்பாட்டை அவரால் வெளிப்படுத்த முடிந்தால், அவரிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் முதல் டெஸ்டில் 25 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதனால் இலங்கை அணியின் இடதுகை பேட்டர்களைக் கட்டுப்படுத்த, அவருக்குப் பதிலாக சரண்ஷ் ஜெயின் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நேற்றைய பயிற்சியில் குல்தீப் யாதவ் பங்கேற்கவில்லை.
தனஞ்ஜெயா டி சில்வா தலைமையிலான இலங்கை அணியில் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். பேட்டிங்கில் டாப் ஆர்டரில் அதிரடி ஷாட்களை விளையாடி ஆட்டமிழப்பதைத் தவிர்த்து, களத்தில் அதிக நேரம் நிலைத்து நின்று விளையாடுவதில் அந்த அணி கவனம் செலுத்த முயற்சிக்கக்கூடும். ஃபார்மில் இருக்கும் கமில் மிஷாரா, சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சஹான் அரச்சிகே ஆகியோரின் வருகை அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.
4-வது இடம் பிடிக்க வாய்ப்பு
கொழும்பு டெஸ்டிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை முழுமையாகக் கைப்பற்றினால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 57.58 சதவீதத்துடன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் டார்வின் டெஸ்ட் போட்டி வெற்றிக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 66.67 சதவீதத்துடன் 4-வது இடத்தில் இருக்கும் வங்கதேச அணி, மெக்கேயில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தோல்வியடைந்தால் 55.56 சதவீதத்துடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது.