தம்புல்லா: இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை-ஏ அணியை 8 ரன்களில் வீழ்த்தியது இந்தியா-ஏ அணி.
இந்தியா-ஏ, இலங்கை-ஏ, ஆப்கானிஸ்தான்-ஏ உள்ளிட்ட மூன்று அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடரின் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் உள்ள தம்புல்லாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக திலக் வர்மா செயல்படுகிறார்.
இன்று தொடங்கிய இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்தது. 16 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. வைபவ் சூர்யவன்ஷி - 14, பிரப்சிம்ரன் சிங் - 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த சூழலில் ரன் அவுட்டாகி பிரியன்ஷ் ஆர்யா வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் திலக் வர்மாவுடன் இணைந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ருதுராஜ். 114 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ருதுராஜ் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 60 ரன்களில் வெளியேறினார்.
ஆயுஷ் படோனி 24, சூர்யான்ஷ் ஷெட்கே 26 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது இந்தியா. 278 ரன்கள் என்ற இலக்கை இலங்கை விரட்டியது. அந்த அணிக்காக நிரோஷன், அவிஷ்கா ஆகியோர் சிறப்பான தொடக்க கொடுத்தனர். அவிஷ்கா 45, நிரோஷன் 47 ரன்களில் வெளியேறினர்.
சதீரா சமரவிக்ரமா 45, கேப்டன் சஹன் 74, வனுஜா 23 ரன்கள் எடுத்தனர். 262 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது இலங்கை. இலங்கையின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையிருந்த நிலையில் மேற்கொண்டு 7 ரன்கள் மட்டுமே சேர்த்து, கைவசம் இருந்த மூன்று விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. இதன் மூலம் இந்தியா 8 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்தியா-ஏ அணி சார்பில் அர்ஷத் கான், அனுகுல் ராய், ஆயுஷ் படோனி, விப்ராஜ் நிகம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அன்ஷுல் காம்போஜ் 1 விக்கெட் வீழ்த்தினார். வானுஜாவை ரன் அவுட் செய்தார் ருதுராஜ். ஆட்ட நாயகன் விருதை ருதுராஜ் வென்றார். வரும் 21-ம் தேதி இந்த தொடரில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.