சண்டிகர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - சண்டிகர் அணிகள் இடையிலான போட்டி சண்டிகரில் உள்ள செக்டார் 16 மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 571 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் 208, அஜித் ராம் 115 ரன்கள் விளாசினர்.
இதையடுத்து விளையாடிய சண்டிகர் அணி 37.3 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆன் பெற்ற சண்டிகர் அணி 477 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நிலையில் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 57 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.
அதிகபட்சமாக அர்ஜுன் ஆசாத் 60, கேப்டன் மனன் வோரா 59 ரன்கள் சேர்த்தனர். நிகில் சர்மா 13, ரோஹித் தண்டா ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய சண்டிகர் அணி 64.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரோஹித் தண்டா 1, நிகில் சர்மா 16, ஜக்ஜித் சிங் 15 ரன்கள் சேர்த்து வெளியேறினர். தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 19.5 ஓவர்களை வீசி 5 மெய்டன்களுடன் 48 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.
கேப்டன் சாய் கிஷோர் 2 விக்கெட்களை கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசிய பிரதோஷ் ரஞ்ஜன் பால் தேர்வானார். இன்னிங்ஸ் மற்றும் 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி போனஸ் புள்ளியுடன் 7 புள்ளிகளை பெற்றது.
‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழக அணி முதல் ஆட்டத்தை ராஜஸ்தானுக்கு எதிராக டிரா செய்திருந்தது. 2-வது ஆட்டத்தில் உத்தராகண்ட் அணியை இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ரயில்வேஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது.