சண்டிகர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - சண்டிகர் அணிகள் இடையிலான போட்டி சண்டிகரில் உள்ள செக்டார் 16 மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 571 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து விளையாடிய சண்டிகர் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 37.3 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. தமிழக அணி சார்பில் சோனு யாதவ் விக்கெட்களை வீழ்த்தினார். சரவண குமார், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2விக்கெட்களை கைப்பற்றினர்.
பாலோ-ஆன் பெற்ற சண்டிகர் அணி 477 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடி நிலையில் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 57 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அர்ஜுன் ஆசாத் 60, கேப்டன் மனன் வோரா 59 ரன்கள் சேர்த்தனர். தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்களை வீழ்த்தினார். சாய் கிஷோர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
கைவசம் 3 விக்கெட்கள் மட்டுமே இருக்க 288 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை சந்திக்கிறது சண்டிகர் அணி. இதனால் தமிழக அணி இன்னிங்ஸை வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.