விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மே.இ.தீவுகள் மெகா வெற்றி: 254 ரன்கள் குவித்து சாதனை | T20 WC 2026

ஹெட்​மயர் விளாசல்!

செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று குரூப்-1 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 107 ரன்களில் வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணி மெகா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

இரு முறை சாம்​பிய​னான மேற்கு இந்​தி​யத் தீவுகள் அணி, சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்​டத்​தில் ஜிம்பாப்வே அணி​யுடன் மோதி​யது. மும்பை வான்​கடே மைதானத்​தில் திங்கட்கிழமை நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 254 ரன்​கள் குவித்​தது.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் அதிக ரன்கள் குவித்த 2-வது அணி என்ற சாதனையை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் படைத்​தது. இந்த வகை சாதனை​யில் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்​பை​யில் கென்​யா​வுக்கு எதி​ராக இலங்கை அணி 260 ரன்​கள் குவித்​து முதலிடத்​தில் உள்​ளது.

          

டி20 உலகக் கோப்​பை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணியின் அதி​கபட்ச ரன் குவிப்​பாக​வும் இது அமைந்​தது. இதற்கு முன்​னர் அந்த அணி 2024-ம் ஆண்டு தொடரில் ஆப்கானிஸ்​தானுக்கு எதி​ராக 218 ரன்​கள் குவித்​திருந்​தது.

ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஷிம்​ரன் ஹெட்மயர் 34 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 85 ரன்​கள் விளாசி மிரளச் செய்​தார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய ரோவ்​மன் பவல் 35 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​கள் விளாசி​னார்.

ஷெர்​பேன் ரூதர்​போர்டு 13 பந்​துகளில், 31 ரன்​களும் ரோமாரியோ ஷெப்​பர்டு 10 பந்​துகளில், 21 ரன்​களும், ஜேசன் ஹோல்​டர் 4 பந்​துகளில் 13 ரன்​களும் சேர்த்​தனர். முன்​ன​தாக பிரண்​டன் கிங் 9, கேப்​டன் ஷாய் ஹோப் 14 ரன்களி​ல் வெளி​யேறினர்.

ஜிம்​பாப்வே அணி தரப்​பில் ரிச்​சர்டு நரவா, பிளெசிங் முசாரா​பானி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்பற்றினர். 255 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 10 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 87 ரன்​கள் எடுத்​து தடுமாறியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

மருமானி 14, பென்னட் 5, ரியான் பர்ல் 0, டியான் மேயர்ஸ் 28, கேப்டன் ராஸா 27, முசேக்வியா 0, முன்யோங்கா 14, கிரேம் க்ரீமர் 0, முசாரா​பானி 0, எவான்ஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 17.4 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஜிம்பாப்வே அணி. இதன் மூலம் 107 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. அதோடு அந்த அணியின் நெட் ரன் ரேட் +5.350 என உள்ளது. இது இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் இந்த பிரிவில் உள்ள அணிகளில் சில தலா 4 புள்ளிகளை பெற வாய்ப்புள்ளது. அப்போது ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் 4 ஓவர்களில் வீசிய மோட்டி, 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். ஹுசைன் 3, மேத்யூ 2, ஹோல்டர் 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ஹெட்மயர் வென்றார்.

ஷிம்​ரன் ஹெட்​மயர் சாதனை: டி20 உலகக் கோப்பை சூப்​பர் 8 சுற்​றில் ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஷிம்​ரன் ஹெட்​மயர் 34 பந்துகளில், 85 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழந்​தார். முன்​ன​தாக அவர், தனது 8-வது அரை சதத்தை 19 பந்​துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் விளாசி​னார்.

இதன் மூலம் அவர், டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் மேற்கு இந்​தி​யத்தீவு​கள் அணிக்​காக குறைந்த பந்​துகளில் அரை சதம் அடித்​திருந்த தனது முந்​தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்​தார். இதற்கு முன்னர் அவர், நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் ஸ்காட்லாந்​துக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் 22 பந்துகளில்​ அரை சதம் அடித்திருந்தார்.

SCROLL FOR NEXT