அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு 188 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.
தென்னாப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோர் உயர முக்கியக் காரணமாக இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்த டெவால்ட் பிரெவிஸ் 45 ரன்கள் சேர்த்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்களை விளாசினார்.
அவர் 24 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் சிறப்பாகப் பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா, 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. முதலில் களமிறங்கிய தொடக்க வீரர் இஷன் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மாவும் அடுத்த ஓவரிலேயே வெளியேறினார். அகமதாபாத் மைதானத்தின் வரலாற்றில் 185 ரன்களுக்கு மேலான இலக்கை இதுவரை எந்த அணியும் வெற்றிகரமாகத் துரத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்றுச் சாதனையை முறியடித்து இந்தியா வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியைக் காண கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.