

கண்டி: நடப்பு ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 ஆட்டத்தில் இலங்கையில் 95 ரன்களில் ஆல் அவுட் செய்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இலங்கையின் கண்டி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச முடிவு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட், 40 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். வில் ஜேக்ஸ் 21 ரணங்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 51 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இந்த தொடரில் இலங்கை வீழ்த்தி இருந்தது. சொந்த மண்ணில் விளையாடுவது இலங்கைக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. அதனால் இந்த இலக்கை நிச்சயம் இலங்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடக்கம் முதலே அதிவிரைவாக விக்கெட்டுகளை இழந்தனர் இலங்கை பேட்ஸ்மேன்கள். இதற்கு காரணம் அவர்கள் ஆடிய தவறான ஷாட்கள் தான்.
பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், பவன் ரத்னநாயகே, கமில் மிஷாரா, துனித் வெல்லாலலகே, கமிந்து மெண்டிஸ், துஷன் ஹேமந்தா, கேப்டன் ஷனகா, சமீரா, மதுஷங்கா ஆகியோர் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். 16.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு இலங்கையை சுருட்டியது இங்கிலாந்து.
இதன் மூலம் 51 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இதில் இங்கிலாந்து தரப்பில் 4 ஓவர்கள் வீசிய வில் ஜேக்ஸ் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். இதன் மூலம் சூப்பர் 8 குரூப்-2 பிரிவில் இப்போது முதலிடம் பிடித்துள்ளது இங்கிலாந்து.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆட்டம்: சூப்பர் 8 சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது.