பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளானா நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், வைல்டு கார்டு வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் எமர்சன் ஜோன்ஸுடன் மோதினார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆடத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்வியா டெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் ஸ்வியா டெக், செக் குடியரசின் சாரா பெஜ்லெக்குடன் மோதுகிறார். 7-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-6, 6-1, 7-6 (10-3) என்ற செட் கணக்கில் 57-ம் நிலை வீராங்கனையான ஹங்கேரியின் அனா போந்தரையும், 13-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் 45-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் டயானா யாஸ்டிரேம்ஸ்காவையும் வீழ்த்தி 2-வது சுற்றில் கால்பதித்தனர்.
2-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 84-ம் நிலை வீராங்கனையான சுலோவேனியாவின் வெரோனிகா எர்ஜாவெக்கையும், 23-ம் நிலை வீரராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் 7-5, 6-0 என்ற செட் கணக்கில் 54-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் தத்ஜனா மரியாவையும் வீழ்த்தினர்.
இந்திய வம்சாவளி வீரர் அசத்தல்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வம்சாவளி வீரரான அமெரிக்காவின் நிஷேஷ் பசவரெட்டி, சகநாட்டைச் சேர்ந்தவரும் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளவருமான டெய்லர் பிரிட்ஸுடன் மோதினார். இதில் வைல்டு கார்டு வீரரான நிஷேஷ் பசவரெட்டி 7-6(5), 7-6(5), 6-7(9), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
21 வயதான நிஷேஷ் பசவரெட்டியின் பெற்றோர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பத்துடன் 1999-ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்கள். டெர்லர் பிரிட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நிஷேஷ் பசவரெட்டி ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமாக விளையாடினார். டிராப் ஷாட்களையும், தனது பேக்ஹேண்ட் டவுன் தி லைன் ஷாட்களையும் தாராளமாகப் பயன்படுத்தினார். தரவரிசையில் டாப்-10-ல் உள்ள வீரருக்கு எதிராக நிஷேஷ் பசவரெட்டி வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.
ஜோகோவிச் போராடி வெற்றி
3-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 83-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஜியோவானி எம்பெட்ஷி பெர்ரிகார்டுடன் மோதினார். 2 மணி நேரம் 51 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 5-7, 7-5, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் 45-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் டயானா யாஸ்டிரேம்ஸ்காவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடுகிறார் 13-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி.