விளையாட்டு

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றில் இன்று நியூஸிலாந்து - பாகிஸ்தான் பலப்பரீட்சை

செய்திப்பிரிவு

கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்பர் 8 சுற்​றில் இன்று இரவு 7 மணிக்கு நியூஸிலாந்து - பாகிஸ்​தான் அணி​கள் கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நடை​பெறுகிறது.

ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற்று வரு​கிறது. 20 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள இந்த கிரிக்​கெட் திருவிழாவில் லீக் சுற்​றுகள் முடிவடைந்​துள்​ளன. லீக் சுற்றின் முடி​வில் ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, பாகிஸ்​தான், ‘பி’ பிரிவில் ஜிம்​பாப்​வே, இலங்​கை, ‘சி’ பிரி​வில் மேற்கு இந்தியத் தீவு​கள், இங்​கிலாந்​து, ‘டி’ பிரி​வில் தென் ஆப்பிரிக்​கா, நியூஸிலாந்து அணி​கள் 8 அணி​கள் சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறி இருந்​தன.

          

இந்த 8 அணி​களும் குரூப் 1, குரூப் 2 என இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் குரூப் 1-ல் இந்​தி​யா, ஜிம்பாப்வே, தென் ஆப்​பிரிக்​கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. குரூப் 2-ல் நியூஸிலாந்​து, பாகிஸ்​தான், இங்​கிலாந்​து, இலங்கை ஆகிய அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.

இதில் ஒவ்​வொரு பிரி​விலும் இடம் பெற்​றுள்ள அணி தனது பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும். புள்​ளி​கள் அடிப்​படை​யில் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் அரை இறு​திக்கு முன்​னேறும்.

இந்​நிலை​யில் சூப்​பர் 8 சுற்று இன்று தொடங்​கு​கிறது. இதன் முதல் ஆட்​டத்​தில் இரவு 7 மணிக்கு கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 2009-ம் ஆண்டு சாம்​பிய​னான பாகிஸ்தான், நியூஸிலாந்​துடன் மோதுகிறது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் 3 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​திருந்​தது.

தென் ஆப்​பிரிக்​கா​விடம் தோல்வி அடைந்த அந்த அணி, ஆப்​கானிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணி​களை வீழ்த்​தி​யிருந்​தது. டாப் ஆர்​டரில் டிம் ஷெய்​பர்ட், ஃபின் ஆலன் ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு வருகின்​றனர்.

அதேவேளை​யில் நடு​வரிசை​யில் ரச்​சின் ரவீந்​தி​ரா, கிளென் பிலிப்​ஸ், மார்க் சாப்​மேன், டேரில் மிட்​செல் ஆகியோரிடம் இருந்து தொடர்ச்​சி​யான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. இதில் கிளென் பிலிப்​ஸ், ரச்​சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு அரை சதம் அடித்​துள்​ளனர். ஆனால் இவர்​கள் பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்படுத்தவில்​லை.

ரச்​சின் ரவீந்​திரா 4 ஆட்​டங்​களில் ஒட்​டுமொத்​த​மாக 72 ரன்களே சேர்த்​துள்​ளார். இதில் கனடா அணிக்கு எதி​ராக சேர்த்த 59 ரன்​களும் அடங்​கும். இது ஒரு​புறம் இருக்க நடப்பு தொடரில் தனது லீக் ஆட்​டங்​களை இந்​தி​யா​வில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி தற்​போது சூப்​பர் 8 சுற்று ஆட்​டங்​களை சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மான இலங்கை ஆடு​களங்​களில் விளை​யாட உள்​ளது.

இது அந்த அணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு சவால்​தரக்​கூடும். அதேவேளை​யில் டாப் ஆர்​டரில் ஃபின் ஆலன், டிம் ஷெய்​பர்ட் ஆகியோர் தங்​களது அதிரடி​யால் அமைத்து கொடுக்​கும் சிறப்​பான தொடக்​கத்தை நடு​வரிசை பேட்​ஸ்​மேன்​கள் சரி​யாக பயன்​படுத்​திக்கொண்டு 180 வரையிலான ஸ்கோரை குவித்​தால் வெற்​றிக்​கான வழிகளை கண்​டறிய​லாம். மேலும் இலக்கை துரத்தினாலும் நடு​வரிசை பேட்​ஸ்​மேன்​களின் பங்​களிப்பு முக்​கிய​மான​தாக இருக்​கும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் லாக்கி பெர்​குசன், மேட் ஹென்​றி, ஜேக்​கப் டஃபி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தங்களது சீரான வேகத்​தால் பலம் சேர்க்​கக்​கூடும். இருப்பினும் இலங்கை ஆடு​களத்​துக்கு தகுந்​த​வாறு தங்களது திட்​டங்​களை அவர்​கள், மாற்றி அமைத்து செயல்​படு​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

இந்த வகை​யில் இவர்​கள் நக்​குல் பால், வேகம் குறைந்த பவுன்​சர் மற்​றும் லெக் கட்​டர்​களை பாகிஸ்​தான் அணியின் பேட்​டிங் வரிசைக்கு எதி​ராக பயன்​படுத்தி அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். சுழற்​பந்து வீச்சில் மிட்​செல் சாண்ட்​னர், இஷ் சோதி பலம் சேர்க்​கக்​கூடும். இவர்​களுக்கு பகுதி நேர சுழற்​பந்து வீச்​சாளர்​களான ரச்​சின் ரவீந்​தி​ரா, கிளென் பிலிப்ஸ் உறுதுணையாக இருக்​கக்​கூடும்.

சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்தான் அணி லீக் ஆட்​டங்​களில் நமீபி​யா, நெதர்​லாந்​து, அமெரிக்கா ஆகிய அணி​களை வீழ்த்​திய நிலை​யில் இந்​தி​யா​விடம் தோல்வி கண்​டிருந்​தது. அந்த அணி தனது லீக் ஆட்டங்களை முழு​மை​யாக இலங்​கை​யில் விளை​யாடி உள்​ள​தால் ஆடு​களத்​தின் தன்​மையை நன்கு அறிந்திருக்கக்​கூடும்.

இந்த வகை​யில் பாகிஸ்​தான் அணி​யின் பந்து வீச்சாளர்கள், குறிப்​பாக சுழற்​பந்து வீச்​சாளர்​கள், மந்தமான ஆடு​களத்​தில் திறம்பட செயல்பட தேவை​யான வேகம் மற்​றும் நீளத்தை அறிந்​து​வைத்​துள்​ளனர். இது சாதக​மான விஷய​மாக பார்க்​கப்​படு​கிறது.

உஸ்​மான் தாரிக், அப்​ரார் அகமது, சைம் அயூப், முகமது நவாஷ், ஷதப் கான் ஆகியோர் தங்​களது சுழற்​பந்து வீச்சால் நியூஸிலாந்து அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். அதேவேளை​யில் பாகிஸ்​தான் அணி​யின் பேட்​டிங் வரிசை​யில் சாஹிப்​ச​தா ஃபர்​ஹான், ஷதப் கான் ஆகியோரை தவிர மற்ற பேட்​ஸ்​மேன்​களிடம் இருந்து பெரிய அளவி​லான பங்​களிப்பு வெளிப்​பட​வில்​லை.

நமீபியா அணிக்கு எதி​ராக சதம் விளாசிய சாஹிப்​சதா ஃபர்​ஹான் நடப்பு தொடரில் 222 ரன்​கள் சேர்த்​துள்​ளார். அவருக்கு அடுத்​த​படி​யாக ஷதப் கான் 88 ரன்​கள் எடுத்துள்ளார். அனுபவ வீர​ரான பாபர் அஸம் நடப்பு தொடரில் 66 ரன்​கள் மட்​டுமே எடுத்​துள்​ளார். அதி​லும் அவரது மட்டை வீச்சு நவீன கால டி 20 போட்​டிக்கு உகந்​த​படி இல்லை என்ற கருத்​துகளும் மேலோங்கி உள்​ளன.

இன்​றைய ஆட்​டத்​தில் அவர், போதிய அளவில் ரன்​கள் சேர்க்​க​வில்லை என்​றால் அணி​யில் தனது இடத்தை தக்கவைப்​பது கடினம் என்றே கூறப்​படு​கிறது. ஏனெனில் ஃபஹர் ஜமான் போன்ற வீரர்​களுக்கு வாய்ப்பு வழங்க பாகிஸ்​தான் அணி நிர்​வாகம் தயா​ராக உள்​ளது.

எப்​படி இருப்​பினும், நியூஸிலாந்து போன்ற அனுபவம் வாய்ந்த அணிக்கு எதி​ராக பாகிஸ்​தான் பேட்​ஸ்​மேன்​கள் ஒருங்​கிணைந்து செயல்​பட்​டால் மட்​டுமே பெரிய அளவிலான ஸ்கோரை குவித்து நெருக்​கடி கொடுக்க முடியும். கட்​டா​யம் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நிலை​யில் நமீபியா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஷாகின் ஷா அப்​ரிடி நீக்​கப்​பட்டு இருந்​தார். நடப்பு தொடரில் அவர், 3 விக்​கெட்​களை மட்​டுமே கைப்​பற்றி உள்ளார்.

அதேவேளை​யில் ஓவருக்கு சராசரி​யாக 11 ரன்​களுக்கு மேல் தாரை வார்த்​திருந்​தார். ஆடு​களத்​தின் தன்​மைக்கு தகுந்​த​படி தனது வீச்​சில் ஷாகின் ஷாவால் மாற்​றங்​களை ஏற்​படுத்​திக் கொள்​ள​முடி​வில்​லை. இதனால்​ இன்​றைய ஆட்​டத்​தி​லும்​ ஷாகின் ஷாவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

SCROLL FOR NEXT