பல்லேகலே: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின. கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தடுமாறியது.
ஜாஸ்பட்லர் 7 ரன்கள் எடுத்த நிலையில் துனித் வெல்லாலகே பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாட முயன்ற போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜேக்கப் பெத்தேல் 3 ரன்கள் எடுத்த நிலையில் தீக்சனா பந்தை விளாச முயன்ற போது பேக்வேர்டு பாயின்ட் திசையில் தில்ஷான் மதுசங்காவிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து டாம் பேன்டன் 3 ரன்கள் எடுத்த நிலையில் தசன் ஷனகாவின் அற்புதமான த்ரோவால் ரன் அவுட் ஆனார்.
இதன் பின்னர் களம் புகுந்த கேப்டன் ஹாரி புரூக் 14 ரன்களில் துனித் வெல்லாலகே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த போதிலும் நிதானமாக விளையாடிய தொடக்க வீரரான பில் சால்ட் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். சர்வதேச டி 20 அரங்கில் இது அவரது 8-வது அரை சதமாக அமைந்தது.
ஆல் ரவுண்டரான சேம் கரண் 11 பந்துகளில், 11 ரன்கள் எடுத்த நிலையில் துஷ்மந்தா சமீரா வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசையில் கமில் மிஷாராவிடம் கேட்ச் ஆனது. 14-வது ஓவரில் இங்கிலாந்து அணி 100 ரன்களை எட்டியது. சீராக விளையாடி வந்த பில்சால்ட் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் துனித் வெல்லாலகே பந்தை லாங் ஆஃப் திசையில் வலுவின்றி அடித்த போது துஷான் ஹேமந்தாவிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து லியாம் டாவ்சன் 6 ரன்களில் தீக்சனா பந்தில் நடையை கட்டினார். இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றிய வில் ஜேக்ஸ் 14 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் மதுசங்கா பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். ஜேமி ஓவர்டன் 10 பந்துகளில் 10 ரன்களும், ஆதில் ரஷித் ஒரு ரன்னும் சேர்க்க 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்களை வீழ்த்தினார். தில்ஷான் மதுசங்கா, தீக்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். துனித் வெல்லாலகே, தீக்சனா, துஷான் ஹேமந்தா ஆகியோர் கூட்டாக 12 ஓவர்களை வீசி 85 ரன்களை வழங்கிய நிலையில் 5 விக்கெட்களை கைப்பற்றினர். பவர்பிளேவில் தில்ஷான் மதுசங்கா 3 ஓவர்களை வீசி 16 ரன்களை மட்டுமே வழங்கினார். இதில் 17 பந்துகளை அவர், ஃபுல் லெந்த்தில் வீசியிருந்தார்.
147 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணியானது இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்களான பதும் நிசங்கா (9), கமல் மிஷாரா (6) ஆகியோரை ஜோப்ரா ஆர்ச்சர் வெளியேற்றினார்.
இதன் பின்னர் வில் ஜேக்ஸ் தனது சுழற்பந்து வீச்சால் குஷால் மெண்டிஸ் (4), பவன் ரத்னாயகே (0), துனித் வெல்லாலகே (10) ஆகியோரை பெவிலியனுக்கு திருப்பினார். பவர்பிளேவில் இலங்கை அணி 34 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.