ராவல்பிண்டி: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 98 ரன்களும், பாகிஸ்தான் அணி 325 ரன்களும் எடுத்தன.
123 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 22 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது. பசிந்து சூரியபண்டரா 18, தனஞ்ஜெயா டி சில்வா 24 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 93 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. பசிந்து சூர்யபண்டாரா 38, தனஞ்ஜெயா டி சில்வா 37, சோனல் தினுஷா 54, பிரபாத் ஜெயசூர்யா 1, லகிரு குமரா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மிலன் ரத்னாயகே 60, அஷிதா பெர்னாண்டோ 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அமிர் ஜமால் 3 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது அப்பாஸ், ரசூல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
கைவசம் ஒரு விக்கெட் மீதம் இருக்க 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. 2 நாட்கள் ஆட்டம் உள்ளதால் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.