விளையாட்டு

மிக்கேல் மெரினோ மீண்டும் அசத்தல்: அரை இறுதியில் நுழைந்தது ஸ்பெயின் | FIFA WC 2026

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரின் கால் இறுதி சுற்​றில் நேற்று அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 2010-ம் ஆண்டு சாம்​பிய​னான ஸ்பெ​யின், பெல்​ஜி​யத்​துடன் மோதி​யது. 30-வது நிமிடத்​தில் ஸ்பெ​யின் அணி முதல் கோலை அடித்​தது. ஸ்பெ​யின் அணி​யின் இளம் நட்​சத்​திர​மான லாமின் யமால் வெளிப்​புற​மாக நகர்ந்து பெட்ரோ பொர்​ரோ​விடம் பந்தை தட்​டி​விட்​டார். பெட்ரோ பொர்ரோ அதை பெனால்டி பகு​திக்​குள் தாழ்​வான கிராஸாக டானி ஆல்​மோவுக்கு அனுப்​பி​னார்.

டானி ஆல்மோ முதல் தொடு​தலிலேயே இலக்கை நோக்கி வலு​வாக அடித்​தார். அதை பெல்​ஜி​யம் அணி​யின் கோல்​கீப்​பர் திபோ கோர்ட்வா தடுத்​தார். ஆனால், அவரால் தடுக்​கப்​பட்ட பந்து நேராக ஃபாபியன் ரூயிஸிடம் செல்ல அவர், பந்தை கோல் வலை​யின் மேல் கார்​னரை நோக்கி திணித்​தார். இதனால் ஸ்பெ​யின் அணி 1-0 என முன்​னிலை பெற்​றது.

41-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணி பதிலடி கொடுத்​தது. திமோதி காஸ்​டாக்னே வலது பக்​கத்​தில் இருந்து அரு​மை​யான கிராஸை பாக்ஸ் பகு​திக்கு உள்ளே அனுப்ப அங்கு தயா​ராக இருந்த சார்​லஸ் டி கெட்​டேலாரே பந்தை தலை​யால் முட்டி கோல் அடித்​தார். இதனால் முதல் பாதி ஆட்​டம் 1-1 என சமநிலை​யில் இருந்​தது.

71-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணி​யின் கோல் கீப்​ப​ரான திபோ கோர்ட்வா காயம் காரண​மாக வெளி​யேறி​னார். இதனால் அவருக்கு பதிலாக சென்னே லாம்​மன்ஸ் களமிறக்​கப்​பட்​டார். 88-வது நிமிடத்​தில் ஸ்பெ​யின் அணி​யின் பாவ் குபார்ஸி தூரத்​திலிருந்து அடித்த பந்தை பெல்​ஜி​யம் அணி​யின் பதிலி கோல் கீப்​ப​ரான சென்னே லாம்​மன்ஸ் சரி​யாக தடுக்​கத் தவறி​னார். அவர் மீது பட்டு திரும்பி வந்த பந்தை அங்கே தயா​ராக இருந்த மிக்​கேல் மெரினோ மின்​னல் வேகத்​தில் செயல்​பட்டு பந்தை கோல் வலைக்​குள் திணித்​தார். இதனால் ஸ்பெ​யின் அணி 2-1 என முன்​னிலை பெற்​றது.

பெல்​ஜி​யம் அணி ஆட்​டத்​தின் இறுதி நிமிடங்​களில் சமன் செய்​வதற்​காக தீவிர​மாகப் போராடியது. பதிலி வீர​ராக களமிறங்​கிய முன்கள வீரர் ரொமேலு லுகாகு இந்த முயற்​சியை முன்​னெடுத்​தார். காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட கூடு​தல் நேரத்​தின் 2-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணி​யின் வீரர் டோகு இடது பக்​கத்​தில் மாற்று ஆட்​டக்​கார​ரான சேலேமேக்​கர்​ஸுக்கு பந்தை பாஸ் செய்​தார். அவர் கோல்​கீப்​பரின் பக்​க​வாட்டு பகு​திக்கு சென்று பைலனில் இருந்து பந்தை கிராஸ் செய்​தார். அப்​போது ஸ்பெ​யின் அணி​யின் கோல் கீப்​பர் உனாய் சிமோன் தனது கோல் கோட்டை விட்டு வெளி​யேறி நடு​வழி​யில் மாட்​டிக்​கொண்​டார்.

காலி​யாக இருந்த கோல் கம்​பத்​துக்கு முன்​னால் ரோமலு லுகாகு பந்​திற்​காகக் காத்​திருந்​தார். அப்​போது சேலேமேக்​கர்ஸ் தூக்கி அடித்த பந்தை ஸ்பெ​யின் அணி​யின் வீரர் அய்​மெரிக் லபோர்ட், அசாத்​தி​ய​மான முறை​யில் துள்ளி பந்தை இடைமறித்து தட்​டி​விட்​டார். இதனால் ஸ்பெ​யின் அணி 2-வது கோலை வாங்​கு​வ​தில் இருந்து தப்​பித்​தது.

இதனால் பெல்​ஜி​யம் அணி​யால் மேற்​கொண்டு கோல் அடிக்க முடி​யாமல் போனது. முடி​வில் ஸ்பெ​யின் அணி 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறியது.

மிக்​கேல் மெரினோ, ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் போர்ச்​சுகலுக்கு எதி​ராக இறு​திக்​கட்​டத்​தில் மாற்று வீர​ராக களமிறங்கி கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடிக்​கொடுத்​திருந்​தார். கால் இறுதி ஆட்​டத்​தி​லும் அவர், 88-வது நிமிடத்​தில் பதிலி வீர​ராக களமிறங்​கிய நிலை​யில் வெற்​றிக்​கான கோலை அடித்து அசத்தி உள்​ளார். அரை இறுதி சுற்​றில் ஸ்பெ​யின் அணி வரும் 14-ம் தேதி பலம் வாய்ந்த பிரான்​ஸுடன் மோதுகிறது.

ஸ்பெ​யின் அணி 2010-ம் ஆண்​டுக்கு பிறகு தற்​போது​தான் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி உள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக அந்த அணி 2-வது முறை​யாக அரை இறு​தி​யில் விளை​யாட உள்​ளது. 1950-ம் ஆண்டு ஸ்பெ​யின் அணி 4-வது இடம் பிடித்​திருந்​தது. எனினும் அப்​போது அரை இறுதி சுற்று கிடை​யாது. அதற்​கு மாற்​றாக 4 அணி​கள்​ இறு​திக்​கட்​டத்​தில்​ ரவுண்ட்​ ராபின்​ முறை​யில்​ விளை​யாடி இருந்தன.

37 போட்டிகளில்...

2023-ம் ஆண்டு மார்ச் முதல் ஸ்பெயின் அணி தொடர்ந்து 37 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது. அதே வேளையில் தொடர்ந்து 18 போட்டிகளாகத் தோல்வியடையாமல் இருந்த பெல்ஜியம் அணியின் சாதனை ஓட்டம் ஸ்பெயின் அணிக்கு எதிரான தோல்வியால் முடிவுக்கு வந்தது.

கோல் வாங்காத சாதனை காலி

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி தனது முதல் ஐந்து ஆட்டங்களில் எதிரணிகளிடம் இருந்து ஒரு கோல் கூட வாங்காமல் இருந்தது. மேலும் கோல்கீப்பர் உனாய் சிமோன் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையிலிருந்து தொடர்ந்து 650 நிமிடங்கள் ஒரு கோல் கூட வாங்காமல் சாதனையை படைத்திருந்தார். இந்த சாதனை பெல்ஜியம் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் சார்லஸ் டி கெட்டேலாரே அடித்த கோல் காரணமாக முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT