ராய்ப்பூர்: இந்தியா உடனான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 359 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக தென் ஆப்பிரிக்கா விரட்டி இருந்தது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட் செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்தது இந்தியா. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் விளாசினர். கே.எல்.ராகுல் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.
359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. டிகாக் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். டிகாக் 8 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் பவுமா உடன் 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் மார்க்ரம். பவுமார் 46 ரன்களில் வெளியேறினார். தொடந்து வந்த மேத்யூ ப்ரீட்ஸ்கே உடன் 70 ரன்கள் கூட்டணி அமைத்தார் மார்க்ரம். 98 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து மார்க்ரம் ஆட்டமிழந்தார்.
பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரீட்ஸ்கே மற்றும் டெவால்ட் பிரேவிஸ் இணைந்து 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிரேவிஸ் 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ப்ரீட்ஸ்கே 64 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். டி சோர்ஸி 17 ரன்களில் ரிட்டையர்ட் ஹெர்ட் முறையில் வெளியேறினார். யான்சன் 2 ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை கார்பின் போஷ் (29) மற்றும் கேஷவ் மகாராஜ் (10) எடுத்து கொடுத்தனர். 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்த தொடரின் அடுத்த போட்டி வரும் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.