

மதுரை: 144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சிஐஎஸ்எப் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழலால் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், மத்திய தொழிலக பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் புதன்கிழமை மாலை உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மனுதாரரான ராமரவிக்குமார், சக மனுத்தாரர்கள், இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு வீரர்களுடன் புதன்கிழமை இரவு திருப்பங்குன்றம் சென்றனர். முருகன் கோயிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோயில் பாதை வழியாக மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை அங்கு போலீஸார் தடுப்பு வேலிகளை போட்டு மறைத்து அனுமதி மறுத்தனர்.
திருப்பரங்குன்றம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாலும், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதாலும் இதில் முடிவு வரும் வரையிலும் யாரையும் மலைக்கு போகக் கூடாது போலீஸார் அறிவுறுத்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இந்து அமைப்பினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்களும் தடுப்புகளை மீறி மலைக்கு மேல் செல்ல முயன்றனர்.
அவர்களை போலீஸார் தடுத்ததால் ஆத்திரத்தில் தடுப்புகளை தள்ளிவிட்டும், மதில் சுவர்களில் ஏறியும் மலை பாதைநோக்கி ஓட முயன்றனர். தடுப்பு வேலிகளும் இந்து அமைப்பினரால் தூக்கியதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. முருகன் கோயிலுக்கு புகுந்து சிலர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பதற்றமான சூழலால் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பதினாறு கால் மண்டபம் , கோயில், மலை பகுதி போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நீதிபதி கூறியது என்ன?
முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ராமரவிக்குமார் உட்பட 4 பேர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிச.1-ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவுபடி செயல்படாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, அவமதிப்பு மனுவை புதன்கிழமை மாலை மனுதாரர் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் குறைபாடுகளுடன் ஒரு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இது நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்கான தந்திரமாகும். செயல் அலுவலர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாட்டோம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதில் மனுதாரரின் அடிப்படை உரிமைகளும் அடங்கியுள்ளன. சட்டத்தின் ஆட்சி ஆபத்தில் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவை அரசு நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளது. யாரையும் தூக்கிலிட உத்தரவிடவில்லை. எந்த கட்டிடத்தையும் இடிக்க உத்தரவிடவில்லை. இந்த நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்பட்டால் எந்த மீளமுடியாத விளைவுகளும் ஏற்படாது.
மறுபுறம் இந்த நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மிகவும் மோசமான சமிக்ஞையை அனுப்பும். இது எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தையில் ஈடுபட அதிகாரிகளை ஊக்குவிக்கும். அரசு எந்த மேல்முறையீடும் தாக்கல் செய்யவில்லை. சட்டப்பூர்வ அர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு என்று கூறக்கூடிய தர்கா தரப்பில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எந்த தடையும் கோரவில்லை.
அதிகாரிகளின் நடத்தையை மன்னிக்க முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்குப் பதிலாக, அந்தச் செயலை அந்த நோக்கத்துக்காக நியமிக்கப்பட்ட ஒருவரால் செய்ய உத்தரவிடுவதன் மூலம், அதன் உத்தரவுக்கு கீழ்ப்படிவதை உறுதி செய்வது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான். இந்த வழக்கில் அத்தகைய அணுகுமுறையை பின்பற்ற விரும்புகிறேன். மனுதாரர் 10 பேருடன் மலைக்குச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கிறேன்.
இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற மனுதாரருக்கும், அவருடன் செல்பவர்களுக்கும் பாதுகாப்புக்காக உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களை அனுப்ப சிஐஎஸ்எப் கமாண்டருக்கு உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவை நிறைவேற்றி வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.