கெபர்ஹா: ஆஸ்திரேலிய அணியை கெபர்ஹா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்களில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டடுள்ளது. இரு அணிகளும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 18-ம் தேதி கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் தொடங்கியது.
இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது தென் ஆப்பிரிக்க அணி. அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா, 334 பந்துகளில் 179 ரன்கள் எடுத்தார். மார்கோ யான்சன் 85, சைமன் ஹார்மர் 82 ரன்கள் எடுத்தனர். 110 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பு என்ற சரிவிலிருந்து தென் ஆப்பிரிக்க அணி மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் யான்சன் 5 விக்கெட்டுகளை இந்த இன்னிங்ஸில் கைப்பற்றி இருந்தார்.
326 ரன்கள் பின்தங்கி ஃபாலோ-ஆன் பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2-வது இன்னிங்ஸில் 51 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாள் ஆட்டமான இன்று (வியாழக்கிழமை) 170 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டம் தொடங்கியது.
அந்த அணி மேற்கொண்டு 139 ரன்கள் மட்டுமே சேர்த்து எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 295 ரன்களுக்கு ஆல் ஆஸ்திரேலியா. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 4, வியான் முல்டர் 3, ஹார்மர் 2 மற்றும் யான்சன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை பவுமா பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-1 என சமனில் உள்ளது. இந்த தொடரின் அடுத்த ஆட்டம் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.