விளையாட்டு

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஹார்மர் பந்துவீச்சில் வென்றது தென் ஆப்பிரிக்கா

செய்திப்பிரிவு

கேப் டவுன்: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 329 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 429 ரன்களும் குவித்தன.

100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டத்தில் 134.4 ஓவர்களில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 288 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்க அணி காகிசோ ரபாடாவின் வேகத்திலும், சைமன் ஹார்மரின் சுழலிலும் தடுமாறியது.

மேட் ரென்ஷா 0, மார்னஷ் லபுஷேன் 4, டிராவிஸ் ஹெட் 14, ஜோஷ் இங்லிஷ் 4, அலெக்ஸ் கேரி 2, கேமரூன் கிரீன் 27, பாட் கம்மின்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக ஜோஷ் ஹேசில்வுட் ரன் எதும் எடுக்காமல் நடையை கட்ட ஆஸ்திரேலிய அணி 57.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நேதன் லயன் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சைமன் ஹார்மர் 6, காகிசோ ரபாடா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.

முதலிடத்தில் நியூஸிலாந்து

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 69.23 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் இருந்த நியூஸிலாந்து 72.22 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 3-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி 71.43 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT