கடந்த 2001-ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 171 ரன்களில் இந்தியா வீழ்த்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான வெற்றிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
இந்த வெற்றியை இந்தியா பெற்று சுமார் 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நினைவு கூர்ந்துள்ளார். அந்தப் போட்டியில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியதும் அவர்தான்.
“அந்த போட்டியில் கடைசி நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு எங்கள் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் நிறைய பேசினோம். நாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதா? என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாமல் இருந்தோம். அதற்கு முந்தைய ஆட்டத்தில்தான் ஆஸ்திரேலியா எங்களை 10 விக்கெட்டுகளில் வீழ்த்தி இருந்தது.
கொல்கத்தாவில் வளர்ந்த எனக்கு ஈடன் கார்டன் மைதானம் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் எப்படி இருக்கும் என்பதை அறிவேன். அதனால் அந்த ஆடுகளத்தில் இலக்கை விரட்டுவது சவாலான ஒன்று. அதில் நான் உறுதியாக இருந்தேன். ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி முதல் ஒரு மணி நேரம் கடந்த பிறகும் நாங்கள் இரண்டு மனநிலையில் இருந்தோம். டிக்ளேர் செய்வது குறித்து அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட் இடம் நான் கேட்ட போதெல்லாம் அவர் பொறுத்திருக்க சொன்னார். ‘என்ன நடக்கிறது? ஏன் இன்னும் டிக்ளேர் செய்யவில்லை? பார்வையாளர்கள் பொறுமை இழக்கின்றனர்’ என எனது அப்பா எனக்கு தூது கொடுத்தார். அதன் பின்னர் நாங்கள் டிக்ளேர் செய்தோம்.
காயம் காரணமாக கும்ப்ளே இல்லை. இருந்தாலும் அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்தோம். வெங்கடபதி ராஜு, ஹர்பஜன் சிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உடன் பந்து வீசினோம். அவர்களை வைத்து பவுலிங் ரொட்டேஷன் செய்ததை மாஸ்டர்ஸ்ட்ரோக் என பலரும் சொல்வதுண்டு.
ஹர்பஜன் 6, சச்சின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஹர்பஜன் 7 விக்கெட் கைப்பற்றி இருந்தார். அது அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸில் நம்பிக்கை கொடுத்தது. சரியான நேரத்தில் அணியின் சிறந்த வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பது கேப்டன்சியில் அடங்கும். அதற்கான பலனை சச்சின் கொடுத்தார். ஹேடன், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஷேன் வார்ன் விக்கெட்டை அவர் கைப்பற்றி இருந்தார்.
அந்த ஆஸ்திரேலிய அணி மிகவும் வித்தியாசமானது. ஒரே செஷனில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் கிரிக்கெட் வீரர்கள் இருந்தனர். அதனால் நாங்கள் கவனமாக இருக்க வேண்டி இருந்தது.
பேட்டிங்கை பொறுத்தவரையில் முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் எடுத்த லக்ஷ்மணை பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் அனுப்பி இருந்தோம். அவருடன் சேர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அழுத்தமான சூழலில் எப்படி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ராகுல் திராவிட் வெளிப்படுத்தினார். அவர்களது இன்னிங்ஸ் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. அது நெடுங்காலத்துக்கான நம்பிக்கை. அதன் பின்னர் அதே நம்பிக்கையுடன் நாங்கள் களமாடினோம். நெடுங்கால ஆதிக்கத்துக்கான விதையை அன்று நாங்கள் விதைத்தோம்” என கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா டெஸ்ட்: 2001-ல் மார்ச் 11 முதல் 15-ம் தேதி வரையில் நடைபெற்ற கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இது இரண்டாவது போட்டியாக அமைந்தது. அதற்கு முன்பு மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் 10 விக்கெட்டுகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஈடன் கார்டனில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 445 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 171 ரன்களில் சுருண்டது. இதையடுத்து ஃபாலோ ஆன் கொடுத்தது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. லக்ஷ்மணும், ராகுல் திராவிடும் 376 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
384 ரன்கள் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா 171 ரன்களில் வெற்றி பெற்றது. அதற்கடுத்து நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.