சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 2026 ஐபிஎல்-க்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு வந்து விட்டார். அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது ஆனால் திருமணத்திற்கு மறுநாளே பயிற்சிக்கு வந்து விட்டார் அர்ஜுன் டெண்டுல்கர்.
இந்நிலையில் அவரது பேட்டின் கனத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தார் ரிஷப் பண்ட். தனது ரூ.27 கோடி சம்பளத்திற்கு நியாயம் கற்பிக்க ரிஷப் பண்ட்டும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வலைப்பயிற்சியின் போது இருவரும் பேட்டின் வெயிட் பற்றி அளவளாவிக் கொண்டனர். அப்போது அர்ஜுன் டெண்டுல்கர், “என் மட்டையின் எடை 1220 கிராம்கள். 1200 கிராம்களுக்குக் குறைவான எடையுள்ள பேட்களை நான் பயன்படுத்துவதில்லை. ஆனால், அப்பா (சச்சின்) அவர் விளையாடிய காலத்தில் 1310-1315 கிராம்கள் எடையுள்ள அதிக எடை மட்டையையே பயன்படுத்தினார்.” என்று ரிஷப் பண்ட்டிடம் அர்ஜுன் டெண்டுல்கர் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரிஷப் பண்ட் உடனே, வெயிட் பேட்டின் பயன் என்ன என்று அர்ஜுனிடம் வினவ, ’பந்தை சும்மா தொட்டா போதும் பறக்கும்’ என்றார் அர்ஜுன் டெண்டுல்கர். மேலும் ரிஷப் பண்ட்டிடம் அர்ஜுன் பகிர்ந்து கொண்ட போது, இந்திய முன்னாள் லெஜண்ட் யுவராஜ் சிங்குடன் ரெகுலராக தான் பிராக்டீஸ் செய்து வருவதையும் குறிப்பிட்டார்.
திருமணமான மறுநாள் முதலே பிராக்டீஸ் செய்யத் தொடங்கி விட்டதாகவும் அர்ஜுன் தெரிவித்தது பண்ட்டின் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது. “உனக்கு என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேள் நான் உதவுகிறேன்.” என்று கேப்டனாக ரிஷப் பண்ட்டும் பொறுப்புடன் அர்ஜுனிடம் தெரிவித்தார்.
மும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் அர்ஜுன். இதுவரை இவரது திறமை பெரிய அளவுக்கு வெளிப்படவில்லை. வெயிட் பேட்டும், திருமண அதிர்ஷ்டமும் இந்த முறையாவது அர்ஜுன் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.